விஜய் மீது சீமான் சரமாரி தாக்கு: “தம்பி என்ற உறவு வேறு. கொள்கையில் முரண் என்பது வேறு. என்னைப் பெற்ற தாய் தந்தையராகவே இருந்தாலும், எங்களுடைய கொள்கைக்கு எதிராக இருந்தால், எதிரி எதிரிதான். நீ கடவுளே ஆனாலும் கொள்கைக்கு எதிராக வந்தால் எதிரிதான். இதில் அண்ணன், தம்பி என்று எதுவும் இல்லை. ரத்த உறவை விட லட்சிய உறவுதான் மேலானது. எனவே, அண்ணன் தம்பி என்பது வேறு. கொள்கை என்று வந்துவிட்டால் பகைதான்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
சென்னையில் சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், “பாலகன் பாலச்சந்திரன் நெஞ்சில் ஐந்து குண்டுகளைத் தாங்கி மரணித்துக் கிடந்தபோது, பதறித்துடிப்பது தமிழ்த் தேசியம். அதேநேரம், சிறிதும் பதற்றம் இல்லாமல், பதவியேற்கும் திராவிடம். இரண்டும் ஒன்றா? திராவிடம் பெண்ணிய உரிமையைப் பேசும். ஆனால் தமிழ்த் தேசியம், பெண்ணிய உரிமையைக் கொடுக்கும், நிறைவேற்றும் .
எனவே, இது இரண்டும் ஒன்று இல்லை. அப்படியிருக்கும்போது, எப்படி விஜய் இரண்டையும் தன்னுடைய கண் என்று கூறுவார்? அதெப்படி சமம் ஆகும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், “திராவிடம் என்றால் என்ன? தமிழ்த்தேசியம் என்றால் என்ன? தவெகவைச் சேர்ந்த யார் இதற்கு விளக்கம் கூறுவார்கள்?” என்றும் அவர் வினவியுள்ளார். முன்னதாக, “திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்று என்கிறார். ஒன்று ஆற்றில் கால் வைக்க வேண்டும். இல்லாவிட்டால் சேற்றில் கால் வைக்க வேண்டும். இது என்ன ரெண்டிலும் ஒவ்வொரு கால் வைப்பது. திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றா ப்ரோ?
அண்மையில் வந்த படத்தில் வில்லனாகவும், கதாநாயகனாகவும் அவரே நடித்ததால் குழம்பிவிட்டார் போல். நீங்கள் சொல்வது கொள்கையே இல்லை. வாட் ப்ரோ.. இட்ஸ் வெரி ராங் ப்ரோ. ஒரு சாலையில் இடதுபுறம் நிற்க வேண்டும் அல்லது வலது புறம் நிற்க வேண்டும். நடுவில் நின்றால் லாரி மோதிவிடும். திராவிடமும், தேசியமும் ஒன்று என்பது நடுநிலை இல்லை. மிகக் கொடுமையான நிலை. நான் குளிரூட்டப்பட்ட அறையில் இருந்து சிந்தித்து வந்தவன் அல்ல.
கொடும் சிறையில் இருந்து சிந்தித்து வந்தவன். நான் குட்டிக் கதை சொல்பவன் அல்ல தம்பி. வரலாற்றைக் கற்பிக்க வந்தவன். நீங்கள் இனிதான் பெரியார், அம்பேத்கர் எல்லாம் படிக்க வேண்டும். நாங்கள் படித்து அதில் பி.ஹெச்டியே வாங்கிவிட்டோம். சினிமாவில் பேசும் பஞ்ச் டயலாக் இது இல்லை தம்பி. இது நெஞ்சு டயலாக்” என்று சீமான் பேசியது கவனிக்கத்தக்கது.
கனடாவுக்கு இந்தியா கண்டனம்: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிரான கனடாவின் குற்றச்சாட்டு தொடர்பாக அந்நாட்டு உயர் தூதரக அதிகாரிக்கு சம்மன் அனுப்பி அழைத்து கடும் கண்டனத்தைத் தெரிவித்ததாக இந்தியா தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்திர் ஜெய்ஸ்வால் கூறுகையில், "நாங்கள் கனடாவின் உயர் தூரதரக அதிகாரியை அழைத்து, அக்.29-ம் தேதி அன்று கனடாவின் பொதுப் பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு நிலைக்குழுவில் நடந்த விஷயங்கள் குறித்து தூதரக ரீதியில் ஒரு குறிப்பைக் கொடுத்தோம்.
அந்தக் குறிப்பில், கனடாவின் துணை வெளியுறவு அமைச்சர் டேவிட் மோரிசன் நிலைக்குழுவின் முன்பு இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக தெரிவித்த அபத்தமானதும், ஆதாரமற்றதுமான குற்றச்சாட்டுகளுக்கு இந்திய கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. இதுபோன்ற பொறுப்பற்ற செயல்கள் இருதரப்பு உறவுகளில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்" என்று தெரிவித்தார்.
முன்னதாக, கனடாவில் சீக்கிய பிரிவினைவாதிகள் குறிவைக்கப்பட்டதற்கு இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் உத்தரவே காரணம் என்று வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு தான்தான் கூறியதாக கனடா துணை வெளியுறவு அமைச்சர் டேவிட் மோரிசன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா தொடங்கம்: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் சனிக்கிழமை காலை தொடங்கியது. கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பந்தல்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கியிருந்து சஷ்டி விரதத்தை தொடங்கினர். இவ்விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் 7-ம் தேதி வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு மேல் கடற்கரையில் நடைபெறுகிறது. நவம்பர் 8-ம் தேதி இரவு திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலைய பணிகள் 95% நிறைவு: “ரூ.42 கோடி செலவில் முடிச்சூரில் கட்டப்பட்டு வரும் ஆம்னி பேருந்து நிலையத்தின் 95 சதவீதம் பணிகள் நிறைவுற்றுன. பேருந்து நிலையம் விரைவில் தமிழக முதல்வரால் திறந்து வைத்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்,” என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
சிறுசேரியில் 50 ஏக்கரில் நகர் வனம்: வனத்துறை திட்டம் - சென்னையை அடுத்த சிறுசேரியில் 50 ஏக்கரில் 19 நீர்நிலைகளை ஏற்படுத்தி, 3 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு நகர் வனம் அமைக்க வனத்துறை திட்டமிட்டுள்ளது.
ஸ்பெயின் பெருமழை பலி 205 ஆக அதிகரிப்பு: ஸ்பெயின் நாட்டில் கனமழை - வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 205 ஆக அதிகரித்துள்ளது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இரண்டு நாட்களாகியும் கூட இயல்புநிலை திரும்பாததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, ஞாயிற்றுக்கிழமை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரசுக்கு தமிழக பாஜக வலியுறுத்தல்: சிறு தொழில் தொடங்குவதற்கு ஊராட்சியில் அனுமதி பெறுவதை கட்டாயமாக்க தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது என்றும், அதுபோன்றதொரு திட்டத்தை வகுத்திருந்தால் உடனடியாக கைவிட வேண்டும் என்றும் தமிழக பாஜக வலியுறுத்தியுள்ளது.
காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: தெற்கு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தின் ஹல்கன் காலி அருகே தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சனிக்கிழமை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு படையினர் - தீவிரவாதிகள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதேபோல், ஸ்ரீநகரின் கன்யார் பகுதியில் மற்றொரு மோதல் சம்பவம் நடைபெற்றது. இதில் இரு தரப்பிலும் உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
ஃபரூக் அப்துல்லா கருத்தால் சலசலப்பு: தீவிரவாதிகளை அதாவது, பயங்கரவாதிகளைக் கொல்வதற்கு பதிலாக அவர்களை உயிருடன் பிடிக்க வேண்டும் என்று தேசிய மாநாடு கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா கூறியிருப்பது அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும்ம் தேசிய மாநாடு கட்சியின் தலைவருமான ஃபரூக் அப்துல்லா இது குறித்து மேலும் கூறுகையில், “தீவிரவாதிகளை கொல்வதற்கு பதிலாக அவர்களை உயிருடன் பிடிக்க வேண்டும். இதன்மூலம் ஜம்மு காஷ்மீர் முழுவதும் சமீபத்தில் நடந்த தீவிரவாத தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்டவர்களை கண்டுபிடிக்க முடியும்.
தாக்குதல்களை மேற்கொள்ளும் பரந்த நெட்வொர்க் தொடர்பான முக்கிய தகவல்களை பிடிபடும் தீவிரவாதிகள் அளிக்க வாய்ப்புள்ளது. பட்காம் தீவிரவாத தாக்குதல் குறித்து விசாரணை நடத்த வேண்டும். ஜம்மு காஷ்மீர் அரசின் ஸ்திரத்தன்மையை போக்க முயற்சிப்பவர்களால் இந்த தாக்குதல் நடந்ததா என்ற சந்தேகம் எனக்கு உள்ளது. தீவிரவாதிகள் உயிருடன் பிடிபட்டால் இந்த தாக்குதல்களுக்கு பின்னால் இருப்பவர்களை நாம் அறிய முடியும். ஒமர் அப்துல்லா அரசை சீர்குலைக்க ஏதேனும் ஏஜென்சி முயற்சி செய்கிறதா என நாம் அறிய முடியும்” என்று கூறியுள்ளார். இந்தக் கருத்து சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மோடி மீது பிரியங்கா சாடல்: 140 கோடி இந்தியர்களுக்கு வெற்று வாக்குறுதிகளை மீண்டும் மீண்டும் அளித்து நாட்டின் உயரிய, மரியாதைக்குரிய பிரதமர் பதவியின் கண்ணியத்தை நரேந்திர மோடி அழித்துவிட்டார் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கடுமையாக தாக்கி உள்ளார்.