விருதுநகரில் முதலாவதாக மறுகால் பாய்ந்த ஸ்ரீவில்லிபுத்தூர் வாழைக்குளம் கண்மாய்: விவசாயிகள் மகிழ்ச்சி


ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டத்தில் முதல் கண்மாயாக ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள வாழைக்குளம் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஓட்டிய ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், வத்திராயிருப்பு பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. மேலும் மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக காட்டாறுகள் மற்றும் ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்து மலையடிவாரத்தில் உள்ள அணை, கண்மாய் மற்றும் குளங்களின் நீர்மட்டம் உயர்ந்தது.

செண்பகதோப்பு பேயனாறு, ராக்காச்சி அம்மன் கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் மலையடிவாரத்தில் உள்ள மம்சாபுரம் வாழைக்குளம் கண்மாய் நீர்மட்டம் உயர்ந்தது. இந்நிலையில் நேற்று இரவு வனப்பகுதியில் பெய்த கனமழையால் ராக்காச்சி அம்மன் கோயில் ஆற்றில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் மாவட்டத்தில் முதலாவதாக மம்சாபுரம் வாழைக்குளம் கண்மாய் முழுவதும் நிரம்பி இன்று காலை மறுகால் பாய்ந்தது. கண்மாய் உபரி நீர் மாவட்டத்தில் பரப்பளவில் பெரியதான ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியகுளம் கண்மாய்க்கு செல்வதால், அதன் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

x