கோவை அருகே டீத்தூள் குடோனில் பயங்கர தீ விபத்து: தீயை அணைக்க 7 மணி நேர போராட்டம்


கோவை: கோவை கவுண்டம்பாளையம் அருகே டீத்தூள் குடோனில் நேற்று (நவ.1) இரவு தீப்பிடித்தது. தீயணைப்பு வீரர்கள் போராடி இன்று (நவ.2) தீயை அணைத்தனர்.

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் அருகேயுள்ள டி.வி.எஸ் நகரில் தனியாருக்கு சொந்தமான டீத்தூள் குடோன் உள்ளது. வெளியில் இருந்து டீத்தூள் கொண்டு வரப்பட்டு, இங்குள்ள குடோனில் வைத்து பேக்கிங் செய்து வெளியிடங்களுக்கு அனுப்பப்படும். 50 அடி நீளம், 100 அடி அகலத்தில், சிமெண்ட் ஷீட் போட்ட மேற்கூரையுடன் இந்த குடோன் உள்ளது. இங்கு ஏராளமான ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். தீபாவளிப் பண்டிகையையொட்டி இந்த டீத்தூள் குடோனுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. குடோன் பூட்டப்பட்டு இருந்தது.

இந்நிலையில், நேற்று (நவ.1) இரவு இந்த குடோனின் உட்புறப் பகுதியில் இருந்து கரும்புகை வெளியே வந்தது. அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்த போது, குடோனில் தீப்பிடித்தது தெரியவந்தது. இதுகுறித்து உடனடியாக கோவை வடக்கு (கவுண்டம்பாளையம்) தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்தவுடன் நிலைய அலுவலர் மணிகண்டன் தலைமையில் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து பீளமேடு, கோவை தெற்கு, கோவைப்புதூர் உள்ளிட்ட இடங்களில் இருந்தும் தீயணைப்பு ஊர்திகள் மற்றும் வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி சம்பவ இடத்துக்கு வந்து தீயணைப்புப் பணியை விரைவுபடுத்தினார். தீயின் வேகத்துக்கு குடோனின் சிமெண்ட் ஷீட் மேற்கூரை உடைந்து கீழே விழுந்தது. தொடர்ந்து கிரேன் இயந்திரத்தை பயன்படுத்தி மேற்புற சுற்றுச்சுவர்கள் இடிக்கப்பட்டு அதன் வழியாகவும் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை செலுத்தி தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் 7 மணி நேர போராட்டத்துக்கு பிறகு இன்று (நவ.2) அதிகாலை தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து காலை லேசாக இருந்த புகையை அணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இத்தீ விபத்தில் குடோனில் இருந்த பொருட்கள், இயந்திரங்கள், பிளாஸ்டிக் கவர்கள் உள்ளிட்ட அனைத்தும் எரிந்து சேதமடைந்தன. தீ விபத்துக்கான காரணம் குறித்து கவுண்டம்பாளையம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். பட்டாசு வெடித்தால் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு காரணமா எனவும் விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து கோவை மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி கூறும்போது, ‘‘மொத்தம் 8 ஊர்திகள் பயன்படுத்தப்பட்டு, இன்று (நவ.2) அதிகாலை 3 மணிக்கு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்படுகிறது’’ என்றார்.

x