சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் ஆட்சி, அதிகாரப் பகிர்வு குறித்த கருத்தை ஆதரிப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது: கேரள மாநிலம் வயநாட்டில் தமிழர்கள் வாழும் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளரான பிரியங்கா காந்தியை ஆதரித்து பிரச்சாரம் செய்யவுள்ளோம். தமிழகத்தில் கிராம கமிட்டிகளின் கட்டமைப்பை வலுப்படுத்த வரும் 5-ம் தேதி முதல் டிச.5-ம் தேதி வரை ஒரு மாதம் புனரமைக்கும் பணிகள் நடைபெறவுள்ளன. இதன்படி டிச.5-ம் தேதி காலை சேலத்திலும், மாலை நாமக்கல்லிலும் இப்பணி தொடங்குகிறது. பின்னர், டிச.5-க்குப் பிறகு கிராம தரிசனம் நிகழ்வை கட்சியின் அகில இந்திய தலைவர்கள் தொடங்கிவைக்க உள்ளனர். அனைத்து கிராமங்களிலும் தலைவர்கள் தங்க வேண்டும். அந்த கிராமங்களில் உள்ள பிரச்சினைகளை கையிலெடுக்க வேண்டும். கிராமப்புற மக்களுடன் காங்கிரஸ் கட்சியினர் நேரடித் தொடர்பில் இருக்க வேண்டும் என்ற திட்டத்தை காங்கிரஸ் தீட்டியுள்ளது.
எல்லா கட்சிகளும் ஆட்சி, அதிகாரத்துக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. நேற்று கட்சி தொடங்கியவர்கள்கூட ஆட்சிக்கு வருவோம் என்கிறார்கள். கருத்து, எழுத்து, பேச்சு சுதந்திரம் எல்லோருக்கும் இருக்கிறது. யார் என்ன வேண்டுமானாலும் பேசலாம், எத்தகைய கருத்தும் தெரிவிக்கலாம். நேரம் வரும்போது கட்சித் தொண்டர்களின் எண்ணம், தமிழகத்தின் நிலை குறித்து கட்சித் தலைமைக்கு சொல்வோம். அதனடிப்படையில் கட்சியின் தேசியத் தலைமை முடிவெடுக்கும்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய்யின் ஆட்சி, அதிகாரப் பகிர்வு குறித்த பேச்சை நாங்கள் வரவேற்கிறோம். விஜய்யின் அரசியல் பயணம் எங்களுக்கு மிகவும் லாபகரமாக இருக்கும். இந்தியா கூட்டணி வெற்றிக்குப் பயன்படும்.
2006 சட்டப்பேரவைத் தேர்தலில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. அப்போது காங்கிரஸ் எந்தவித நிபந்தனையும் விதிக்காமல் திமுக ஆட்சி அமைக்க ஆதரவு அளித்தது. அமைச்சரவையில் பங்கு வேண்டும் என்று கேட்டிருந்தால் கொடுத்திருப்பார்கள். ஆனால், சோனியாகாந்தி பெருந்தன்மையுடன் அதுபோல எதுவும் கேட்கவில்லை. இது ஒரு முன்உதாரணம். தற்போது ஆட்சி, அதிகாரப் பகிர்வு குறித்து தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. வருங்காலத்தில் தமிழகத்தில் ஆட்சியில் பங்கு அளிப்பது குறித்து மக்கள் தங்கள் தீர்ப்பின் மூலம் முடிவு செய்வார்கள். இவ்வாறு செல்வப்பெருந்தகை தெரிவித்தார்