வரும் ஆண்டுகளில் புதுச்சேரி ‘மினி இந்தியா’ போன்று மாறும்: துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் நம்பிக்கை


புதுச்சேரி: புதுச்சேரி, தமிழகம், ஆந்திரா, சத்தீஸ்கர், ஹரியானா, கர்நாடகா, கேரளம், மத்தியபிரதேசம், டெல்லி, பஞ்சாப், அந்தமான் நிக்கோபார், சண்டிகர், லட்சதீவு ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் உதயநாள் கொண்டாட்டம் புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் வெள்ளிக்கிழமை (நவ.01) மாலை நடைபெற்றது.

இந்த கொண்டாட்ட நிகழ்வை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நான் தொடங்கி வைத்தார். முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், சாய் ஜெ. சரவணன்குமார், துணை சட்டப்பேரவைத் தலைவர் ராஜவேலு மற்றும் அரசு துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கலைமாமணி தட்சிணாமூர்த்தியின் தவில் இசை மற்றும் பல்வேறு மாநிலங்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவற்றை துணைநிலை ஆளுநர், முதல்வர் உள்ளிட்டோர் கண்டுகளித்தனர். இந்நிகழ்வில் பேசிய துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், “புதுச்சேரி சுற்றுலா தலமாக மட்டுமில்லாமல் பல்வேறு மாநில பண்பாடுகளையும் பிரதிபலிக்கின்ற மாநிலமாக வளர்ந்து வருகிறது. வரும் ஆண்டுகளில் புதுச்சேரி மினி இந்தியா போன்று மாறும்.

இன்று பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் உதய நாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இந்த நிகழ்ச்சி நம்முடைய ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. விடுமுறை நாட்களையும் பொருட்படுத்தாமல் இந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொண்ட அனைவரையும் இந்த நேரத்தில் மனதார பாராட்டுகிறேன்.
சர்தார் வல்லபாய் பட்லேின் பிறந்தநாள் தேசிய ஒற்றுமை தினமாக அண்மையில் கொண்டாடப்பட்டது. அவரால்தான் பல பிரிவுகளாக இருந்த நம் நாடு ‘இந்தியா’ என்ற பெயரில் ஒருங்கிணைக்கப்பட்டது. அதனாலேயே அவரது பிறந்த தினம் தேசிய ஒருமைப்பாட்டு தினமாகக் கொண்டாடப்படுகிறது.

பிரதமரின் “ஒரே பாரதம் உன்னத பாரதம்“ திட்டத்தின்கீழ் நடைபெறும் இது போன்ற நிகழ்ச்சிகள் மூலமாக நம்முடைய சசோதரத்துவத்தை நாம் பலப்படுததிக் கொள்ள முடிகிறது. நம்முடைய மொழி, பண்பாடு, பழக்க வழக்கங்கள், கலை, வரலாறு எல்லாவற்றையும் ஒரு நேர்கோட்டில் இணைத்து பார்த்து இந்தியர்கள் அனைவரும் ஒன்று என்ற உணர்வை புரிந்து கொள்ள முடிகிறது. இன்றைய நிகழ்ச்சி “இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு“ என்பதற்கான ஒரு அடையாளமாக இருக்கிறது. நம்முடைய பலதரப்பட்ட பண்பாடுகளை நாம் புரிந்து கொள்ள வாய்ப்பாக அமைந்திருக்கிறது.

இதுபோன்ற ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததற்காக பிரதமருக்கு நான் மனதார நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய தொலைநோக்கு பார்வை நமக்கெல்லாம் ஒரு முன் உதாரணமாக அமைகிறது. இதன் மூலமாக அவர் ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் தேசப்பற்றை விதைத்திருக்கிறார். அந்த தேசப்பற்று உணர்வு இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக நாடுகளாலும் மதிக்கப்படுகிறது”என்று தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்தின் விடுதலை வரலாற்றை விளக்கும் விதமாக கிராமப்புறங்களை சேர்ந்த அரசு பள்ளி மாணவ மாணவிகள் வரைந்த ஓவியங்களை துணைநிலை ஆளுநருக்கு பரிசாக அளித்தனர். இறுதியில் ஆளுநர் மாளிகைக்கு வந்திருந்த அனைவருக்கும் விருந்தளிக்கப்பட்டது.

x