தீபாவளியன்று கோவையில் பட்டாசு வெடித்ததில் மிதமான காற்று மாசு!


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புலியகுளம் காமராஜர் சாலையில் காணப்பட்ட புகை மூட்டம். | படம்: ஜெ.மனோகரன்.

கோவை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடித்ததில் கோவையில் காற்று மாசு மிதமான அளவு இருந்தது என தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகை காலங்களில் பட்டாசு வெடிப்பது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. மேலும், பண்டிகை தொடங்குவதற்கு ஒரு நாள் முன்பு தொடங்கி மறுநாள் வரை தொடர்ந்து சிறுவர் முதல் பெரியவர் வரை பட்டாசு வெடித்து கொண்டாடுகின்றனர். மேலும், தீபாவளி பண்டிகை காலங்களில் பட்டாசு வெடிப்பதால் நிலம், நீர், காற்று மாசு ஏற்படுகிறது. அதேபோல ஒலி மற்றும் காசு மாசு ஏற்படுவதால் சிறுவர் முதல் பெரியவர் வரை உடல் அளவிலும், மனதளவிலும் பாதிப்பு ஏற்படுகிறது.

இதனால் காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில், கோவையில் ஆட்சியர் அலுவலகம் மற்றும் சாய்பாபா காலனி ஆகிய இரு பகுதிகளில் காற்றின் தர அளவு குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதுகுறித்து,மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறும்போது, "கோவை மாநகரில் தீபாவளி பண்டிகைக்கு முன்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் காற்றின் தர குறியீடு 50 வரை இருந்தது. இது காற்று மாசு அளவில் திருப்திகரமாக இருந்தது.

கடந்த இரண்டு நாள்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் காற்றின் தர குறியீடு அளவு 100-ஐ கடந்துள்ளது. இது காற்று மாசு பொருத்தவரையில் மிதமான அளவு ஆகும். எனவே, கோவை நகரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் பெரிய அளவில் காற்று மாசுபடவில்லை" என்றனர். இதுகுறித்து, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் அறிவியல் துறை பேராசிரியர் பிரசாந்த் ராஜன் கூறியதாவது: “தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிப்பதால் அதில் இருந்து வெளியாகும் கார்பன் மோனாக்சைடு, கார்பன்டை ஆக்சைடு, சல்பர் டை ஆக்சைடு, நைட்ரஸ் ஆக்சைடு ஆகியவையால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது.

கோவை வாலாங்குளத்தில் இறந்து மிதக்கும் மீன்கள்.

குறிப்பாக காற்று துகள் மாசு அளவு பி.எம். 2.5 என்பது சிறுவர் முதல் பெரியவர் வரை நுரையீரல் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதில் பி.எம். 2.5 பிரிவானது பி.எம்.10 பிரிவு என்ற துகள்களை விட மிக நுண்ணிய துகளாகும். இந்த பி.எம்.2.5 என்பது சுவாச பாதிப்பை ஏற்படுத்தும். அதேபோல பட்டாசுகளில் இருந்து அதிக அளவில் சல்பர் டை ஆக்சைடு வெளியேறுவதால் அது மீண்டும் அமில மழையாகப் பெய்ய வாய்ப்பு உள்ளது.

இந்த மழை நீர் குளம், ஏரிகளில் கலப்பதால் நீர் நிலைகள் மாசு ஏற்படுகிறது. அதேபோல நிலத்தடி நீர், மண் வளம் ஆகியவை பாதிப்புக்குள்ளாகிறது. மேலும், அனுமதிக்கப்பட்ட 125 டெசிபல் அளவுக்கு அதிகமாக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதால் சிறுவர் முதல் பெரியவர் வரை காது கேட்கும் திறன் பாதிக்கப்படுகிறது. நகர பகுதிகளில் மரங்களில் வசிக்கும் சிறு பறவைகள் பட்டாசு வெடிக்கும் ஒலியால் அச்சமடைந்து மரங்களிலேயே தஞ்சமடைந்து வெளி வருவதில்லை. இதனால் தீபாவளி பண்டிகை காலங்களில் பறவைகளின் சத்தத்தை கேட்க முடியாது. பட்டாசு குப்பைகளை பாதுகாப்பான முறையில் சேகரித்து அகற்றிட வேண்டும். தீபாவளி பண்டிகை காலங்களில் குறைவான ஒலி எழுப்பும் பட்டாசுகளையும், அதிக வேதி பொருள்கள் கலக்காத பசுமை பட்டாசுகளை வெடித்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

இதுகுறித்து, கோவை இயற்கை அமைப்பின் உறுப்பினரும், பறவையியல் ஆர்வலருமான சாஹித்யா கூறும்போது, “தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் ஒலி அளவு பறவைகளை மிகவும் தொந்தரவு அடைய செய்யும். பட்டாசு புகையால் பறவைகளுக்கு சுவாச பாதிப்பை ஏற்படுத்தும். இரவு நேரங்களில் வெடிக்கும் பட்டாசு வெளிச்சத்தால் ஆந்தை, கூகை உள்ளிட்ட இரவாடி பறவைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதேபோல பாலூட்டியான வெளவாலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக கூடு கட்டி முட்டையிடும் பறவைகளுக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதிக ஒலியால் தாய்ப்பறவை கூட்டை விட்டு அடை காக்காமல் வேறு பாதுகாப்பான இடத்திற்கு சென்றுவிடும். அந்த தாய்ப்பறவை மீண்டும் வராது" என்றார்.

x