வைகை ஆற்றில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க சிசிடிவி கேமரா கண்காணிப்பு - ஐகோர்ட் உத்தரவு


மதுரை: வைகை ஆற்றில் குப்பைகள் கொட்டுவதை தடுக்கும் நோக்கத்தில் வைகையில் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கீழப்பசலை, உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில்: "சிவகங்கை மாவட்டம் ஆதனூர் கிராமத்தில் சுமார் 400-க்கு மேற்பட்ட விவசாய குடும்பங்கள் உள்ளன. ஆதனூரில் 22.87 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்மாய் உள்ளது. இந்தக் காண்மாயால் 220.49 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது.

ஆதனூர் கண்மாய்க்கு வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு சேமிக்கப்படுவது வழக்கம். தற்போது வைகை ஆற்றில் மழைநீர் வந்து கொண்டு இருக்கிறது. வைகை ஆற்று தண்ணீரை ஆதனூர் கண்மாய்க்கு திருப்பி கண்மாயை நிரப்ப உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி முகமது சபிக் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், மதுரை வைகை ஆற்றின் கரையோரம், மாநாகராட்சி சார்பில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டு உள்ளன. ஆனாலும் குடியிருப்போர், வைகை ஆற்றில் கழிவுகளை கொட்டுகின்றனர் எனக் கூறப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், ஒருவருக்கு அடிப்படை உரிமைகள் இருப்பது போல் அடிப்படை கடமைகளும் உள்ளன. வைகை ஆற்றில், வாகனங்கள், பைக்குகளை நிறுத்தி சுத்தம் செய்கின்றனர். குப்பை கொட்டுகின்றனர். இதே நான் நேரில் பார்த்தேன். குடிநீருக்கு பயண்படும் வைகை ஆற்று நீரை மாசு படாமல் தூய்மையாக வைத்திருக்க வேண்டாமா, வைகை ஆற்றில் சிசிடிவி கேமாரா பொருத்தி கண்காணிக்க வேண்டும். குப்பை கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வைகையை ஆற்றை தூய்மையாக வைத்திருக்க, மதுரை மாநாகராட்சி, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு குடிமகனுக்கும் அடிப்படை உரிமைகள் இருப்பது போல், அடிப்படை கடமைகளும் உள்ளன. இயற்கை வளங்களை பாதுகாக்க இங்குள்ள ஒவ்வொரு வரும் பொறுப்புடன் செயல் பட வேண்டும் மனுதாரர் மனு தொடர்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

x