திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் தீபாவளியை முன்னிட்டு குவிந்த குப்பைகளை கட்சி நிர்வாகிகள், தூய்மைப் பணியாளர்களுடன் இணைந்து சச்சிதானந்தம் எம்.பி., அகற்றினார்.
திண்டுக்கல் நகரில் கடைவீதி பகுதியில் தீபாவளியை முன்னிட்டு தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு தீபாவளிக்கு முன்தினம் விடிய விடிய வியாபாரம் நடந்தது. பொதுமக்களும் ஆயிரக்கணக்கில் கூடி பொருட்களை வாங்கிச்சென்றனர். இதையடுத்து கடைவீதி பகுதியில் குப்பைகள் அதிகம் குவிந்து கிடந்தன. இவற்றை அகற்ற தூய்மைப் பணியாளர்களுக்கு உதவிடும் வகையில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் அவர்களுடன் இணைந்து குப்பைகளை அகற்றும் பணியை நேற்று காலை மேற்கொண்டனர்.
இந்நிகழ்வை திண்டுக்கல் எம்.பி., ஆர்.சச்சிதானந்தம் துவக்கி வைத்து, குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார். திண்டுக்கல் மணிக்கூண்டு, பெரியகடை வீதி பகுதி உள்ளிட்ட பல பகுதியில் தொடர்ந்து குப்பைகளை அகற்றும் பணியில் தூய்மை பணியாளர்கள், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகளுடன் இணைந்து எம்.பி., ஈடுபட்டார்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் கே.ஆர்.பாலாஜி, மாவட்டச் செயலாளர் முகேஷ், பொருளாளர் பிரேம் குமார், திண்டுக்கல் ஒன்றியத் தலைவர் ஜோன்சன், ஒன்றியச் செயலாளர் அசோக், இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் தீபக் ராஜ் ஆகியோர் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாநகரச் செயலாளர் ஏ.அரபு முகமது, கவுன்சிலர் ஜோதிபாசு உள்ளிட்டோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.