தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சியில் தீபாவளியையொட்டி மட்டும் 29 டன் பட்டாசு கழிவுகள் அகற்றம் செய்யப்பட்டதாக தாம்பரம் மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
தீபாவளியையொட்டி சிறுவர் முதல் பெரியவர் வரை பட்டாசுகள் வெடித்து தீபாவளியை உற்சாகமாக கொண்டாடினர். மேலும், புதுமண தம்பதிகள் தங்கள் தலை தீபாவளியை சிறப்பாக கொண்டாடினர். தீபாவளியான நேற்று சென்னையில், காலை 6 மணியில் இருந்து 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் பல இடங்களில் யாரும் இதனை கடைப்பிடிக்கவில்லை.
வெடிக்கப்பட்ட பட்டாசுகளின் குப்பைகள் தாம்பரம் மாநகரம் முழுவதும் ஆங்காங்கே தேங்கியது. இப்படி டன் கணக்கில் பல்வேறு இடங்களிலும் கிடக்கும் குப்பைகளை தூய்மைப் பணியாளர்கள் அதிகாலை முதலே அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். தாம்பரம் மாநகராட்சி, 5 மண்டலங்கள், 70 வார்டுகளை கொண்டுள்ளன. இங்கு சுமார் 1680 தெருக்கள் உள்ளன. 5 மண்டலங்களிலும் குப்பை சேகரிக்கும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நாள்தோறும் 400 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது.
இந்நிலையில், தீபாவளி பண்டிகை முடிந்து, நேற்று காலை முதல் 70 வார்டுகளிலும் குப்பை அகற்றப்பட்டது. பட்டாசு குப்பை அதிகமாக இருக்கும் என்பதால் இப்பணியில் 1650 தூய்மை பணியாளர்கள், 385 லோடு ஆட்டோக்கள், 55 டிராக்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன. ஐந்து மண்டலங்களிலும், வழக்கமாக அகற்றப்படும் 400 டன் குப்பை இல்லாமல், பட்டாசு குப்பை 29 டன் அகற்றப்பட்டது.
இதனிடையே, தாம்பரத்தில் சில இடங்களில் மழை பெய்த நிலையில் மழை நீரோடு சேர்ந்து பட்டாசு குப்பைகளும் தேங்கி இருப்பதால் பட்டாசு குப்பைகளை அகற்றுவதில் தூய்மைப் பணியாளர்களுக்கு கடும் சிரமடைந்துள்ளது. பட்டாசு குப்பைகளை சாலைகளில் ஒட்டிக் கொள்வதால் சுரண்டி எடுத்துச் செல்லும் நிலை ஏற்பட்டது. பட்டாசு குப்பைகளோடு சேர்ந்து கம்பி மத்தாப்புகள் உள்ளிட்ட கம்பிகளும் குப்பைகளோடு கிடந்ததால் அதனை அகற்றுவதின்போது தூய்மைப் பணியாளர்களுக்கு காயம் ஏற்பட்டது.
சமூக ஆர்வலர்கள் தூய்மை பணி: குரோம்பேட்டையில் தீபாவளி அன்று வெடித்த பட்டாசு கழிவுகளை குரோம்பேட்டை மக்கள் விழிப்புணர்வு சங்கம் சார்பில் ஏற்பாடு செய்து தாம்பரம் மாநகராட்சி 2வது மண்டல குழுத் தலைவர் இ. ஜோசப் அண்ணாதுரை தலைமையில் நியூ காலனி பகுதி தெருக்களில் உள்ள பட்டாசு கழிவுகளை அகற்றி தொடங்கி வைத்தார். மேலும் மக்கள் விழிப்புணர்வு சங்க தலைவர் சந்தானம், மற்றும் சங்க உறுப்பினர்கள் வீதி வீதியாக சென்று சிதறி கிடக்கும் பட்டாசு கழிவுகளை துப்புரவு பணியாளர்களுடன் இணைந்து அகற்றினர்.
தொடர்ந்து பாரதிபுரம் நல சங்கம் சார்பில் அண்ணாமலை தெரு, சம்மந்தன் தெரு, ரவி தெரு போன்ற பகுதிகளில் உள்ள பட்டாசு கழிவுகளை அகற்றினர். பொதுமக்கள் தங்கள் பகுதியில் குப்பைகளை அகற்றி தூய்மை பணியாளர்களுக்கு உதவிட வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.