கோவை: கோவை மாவட்டத்தில் பட்டாசுகளால் நேற்று 11 இடங்களில் ஏற்பட்ட தீ விபத்துகள் ஏற்பட்டன. தகவல் வந்த உடன் தீயணைப்புத் துறையினர் உடனடியாக சென்று அணைத்தனர்.
தீபாவளிப் பண்டிகை நேற்று (அக்.31) கொண்டாடப்பட்டது. இதையொட்டி பட்டாசுகள் வெடிக்கும் போது ஏற்படும் தீ விபத்து சம்பவங்களைத் தடுக்க, தீயணைப்புத் துறையினர் சார்பில் பாதுகாப்பாக பட்டாசுகள் வெடிப்பது குறித்து பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு முன்னரே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு இருந்தது. காவல்துறையினர் சார்பில் பாதுகாப்பாக பட்டாசுகள் வெடிப்பது குறித்து எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தது.
மேலும், தீபாவளிப் பண்டிகையையொட்டி, கோவை தெற்கு, கோவை வடக்கு (கவுண்டம்பாளையம்), கணபதி, பீளமேடு, சூலூர், பொள்ளாச்சி, வால்பாறை, பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம் கோவையில் உள்ள அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும் ஏதாவது அழைப்புகள் வந்தால் உடனடியாக செல்வதற்கு ஏற்ப தீயணைப்பு ஊர்திகளுடன் வீரர்கள் நேற்று (அக்.31) தயார் நிலையில் இருந்தனர். அதன்படி, மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் இருந்து தீ விபத்துகள் தொடர்பாக அழைப்புகள் வந்தன.
இதுகுறித்து கோவை மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி மற்றும் தீயணைப்புத்துறை அதிகாரிகள் கூறியதாவது: ''கோவை வடக்கு நிலையத்திற்கு 4 அழைப்புகள், பொள்ளாச்சி நிலையத்திற்கு 3 அழைப்புகள், பீளமேடு நிலையத்திற்கு 2 அழைப்புகள், கணபதி மற்றும் சூலூர் நிலையத்துக்கு தலா 1 மற்றும் பிற நிலையங்கள் சேர்த்து மாவட்டத்தில் (அக்.31) தீ விபத்துகள் தொடர்பாக மொத்தம் 17 அழைப்புகள் வந்தன.
இதில் 11 அழைப்புகள் பட்டாசுகளால் ஏற்பட்ட தீ விபத்துகளாகும். தென்னை மரத்தில் ராக்கெட்டால் தீ விபத்து ஏற்பட்டது, தொண்டாமுத்தூர், பொள்ளாச்சியில் குடிசை வீட்டின் மேற்கூரையின் மீது ராக்கெட்டால் தீ விபத்து ஏற்பட்டது, சூலூரில் தட்டுப்போரில் பட்டாசால் தீ விபத்து ஏற்பட்டது ஆகியவற்றை குறிப்பிடலாம். மற்ற 6 அழைப்புகள் வீடுகளில் சிலிண்டர் கசிவு உள்ளிட்ட மற்றவை சார்ந்த தீ விபத்துகளாகும். தகவல் வந்த உடன் சம்பவ இடத்துக்குச் சென்று தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்துகளால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை” என்று கூறினர்.