விருதுநகர்: விருதுநகரில் நேற்று இரவு தீப்பெட்டி ஆலை ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் சுமார் 400 மூட்டை தீக்குச்சிகள் எரிந்து சாம்பலானது.
சிவகாசி கார்னேசன் காலனியைச் சேர்ந்தவர் ஹரிராம் சுந்தரவேல் (50). இவருக்குச் சொந்தமான தீப்பெட்டி ஆலை விருதுநகர் அல்லம்பட்டியில் குல்லூர்சந்தை சாலையில் இயங்கி வருகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று இரவு அப்பகுதியில் சிறுவர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடியுள்ளனர். அப்போது, பட்டாசு தீப்பெறி தீப்பெட்டி ஆலை ஜன்னல் வழியாக உள்ளே விழுந்து தீப்பற்றியது.
தீக்குச்சிகளில் தீப்பற்றியதால் தீ வேகமாக பரவி ஆலை முழுவதும் தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்த விருதுநகர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் ஆலையிலிருந்த சுமார் ரூ.13 லட்சம் மதிப்பிலான 400 மூட்டை தீக்குச்சிகள் எரிந்து சாம்பலானது. அதோடு ரூ.10 லட்சம் மதிப்பிலான இயந்திரங்களும் தீயில் எரிந்து சேதமடைந்தன. இந்த தீ விபத்து குறித்து விருதுநகர் கிழக்கு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.