புதுச்சேரி: புதுச்சேரியில் சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளை ஒட்டி மாணவ மாணவியரின் தேசிய ஒற்றுமை தின ஓட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆளுநர், முதல்வர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாள் விழா புதுச்சேரி அரசு சார்பில் தேசிய ஒற்றுமை தினமாக (Rashtriya Ekta Diwas) இன்று (அக்.31) கொண்டாடப்பட்டது. இதனையொட்டி கடற்கரைச் சாலை காந்தி சிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சர்தார் வல்லபாய் பட்டேல் திருவுருவப்படத்துக்கு துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி, ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து காவல்துறை, தேசிய மாணவர் படை மற்றும் பள்ளி மாணவ மாணவியரின் அணிவகுப்பு நடைபெற்றது. தொடர்ந்து, துணை நிலை ஆளுநர் தேசிய ஒற்றுமை தின உறுதி மொழியை வாசிக்க அனைவரும் ஏற்றுக்கொண்டனர். பின்னர் பல்வேறு கலைக்குழுவினரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிறைவாக மாணவ மாணவியரின் தேசிய ஒற்றுமை தின ஓட்டம் நடைபெற்றது.
இந்த விழாவில், சட்டப்பேரவைத் தலைவர் செல்வம். பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், சட்டப்பேரவைத் துணைத் தலைவர் ராஜவேலு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் சாய் ஜெ. சரவணன் குமார், வளர்ச்சி ஆணையர் மற்றும் செயலர் (நிதி) ஆசிஷ் மாதோவ்ராவ் மோரே, அரசுச் செயலர் கேசவன், மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன், துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (சட்டம் ஒழுங்கு) சத்தியசுந்தரம், துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (ஆயுதப்படை காவலர் / பயிற்சி) பிரிஜேந்திர குமார் யாதவ், செய்தி மற்றும் விளம்பரத்துறை இயக்குநர் தமிழ்ச்செல்வன், முதுநிலை காவல் கண்காணிப்பாளர்கள், தேசிய மாணவர் படை அதிகாரிகள் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.