புதிய உச்சத்தில் தங்கம் விலை: பவுனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.59,520-க்கு விற்பனை


தங்கம் விலை பவுனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.59,520-க்கு விற்பனையாகிறது. தினமும் தங்கம் விலை புதிய உச்சத்தை அடைந்து வருவதால், நகை வாங்குவோர் கவலை அடைந்துள்ளனர்.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது.

கடந்த ஜுலை மாதம், மத்திய அரசு பட்ஜெட்டில் தங்கம் மீதான இறக்குமதி வரியை குறைத்தது. இதன் காரணமாக, அன்று ஒரேநாளில் தங்கம் பவுனுக்கு ரூ.2,200 வரை குறைந்தது. தொடர்ந்து தங்கம் விலை குறையத் தொடங்கியது. ஆனால், அது நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை.

அமெரிக்க ஃபெடரல் வங்கி வைப்பு நிதிக்கான வட்டி விகித்தை குறைத்து அறிவிப்பு வெளியிட்டதையடுத்து, தங்கம் விலை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. அதன்படி, கடந்த மாதம் 16-ம் தேதி பவுன் ரூ.55 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. பின்னர் படிப்படியாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது.

இம்மாதம் 21-ம் தேதி ஒரு பவுன் ரூ.58,400-க்கும், 23-ம் தேதி பவுன் ரூ.58,720-க்கும் அதிகரித்து புதிய உச்சத்தை அடைந்தது. இந்நிலையில், தங்கம் விலை நேற்றும் அதிகரித்து புதிய உச்சத்தை அடைந்துள்ளது. தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.65 அதிகரித்து ரூ.7,440-க்கும், பவுனுக்கு ரூ.520 அதிகரித்து ரூ.59,520-க்கும் விற்பனையானது. 24 காரட் சுத்தத் தங்கம் பவுன் ரூ.63,560-க்கு விற்பனையாகிறது.

அதேபோல், வெள்ளி கிராம் ரூ.109-க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.1,09,000 ஆக உள்ளது. தினமும் தங்கம் விலை புதிய உச்சத்தை அடைந்து வருவதைக் கண்டு நகை வாங்குவோர் கவலையடைந்துள்ளனர்

x