மதுரை: “மனைவியின் தனியுரிமையை மீறி கணவர் சேகரித்த மனைவியின் செல்போன் உரையாடல்களை ஆதாரமாக ஏற்கக் கூடாது” என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பரமக்குடியைச் சேர்ந்த பெண் ஒருவர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: “எனக்கு 2003-ல் திருமணம் நடைபெற்றது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர். என் கணவர் பரமக்குடி சார்பு நீதிமன்றத்தில் 2019-ல் விவகாரத்து வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் என் செல்போன் உரையாடல்கள் பட்டியலை ஆதாரமாக சமர்ப்பித்துள்ளார். இதை ஆதாரமாக ஏற்க கூடாது என கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தேன். அந்த மனு மீது நீதிமன்றம் 14.3.2024-ல் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்” என அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: “இந்தியாவில் பிஎஸ்ஏ சட்டம் 1.7.2024-ல் அமலுக்கு வந்துள்ளது. இந்தச் சட்டத்தின் பிரிவு 63-ல் மின்னணு ஆவணங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. இதில் மின்னணு ஆவணங்களை தாக்கல் செய்யும் போது அதன் உண்மை தன்மை குறித்த சான்றிதழையும் தாக்கல் செய்ய வேண்டியது கடடாயம் எனக் கூறப்பட்டுள்ளது. அந்தச் சான்றிதழில் கணிணி பொறுப்பாளர், வல்லுனர் கையெழுத்திட்டிருக்க வேண்டும்.
இது தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 79ஏ- யிலும் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் பிஎஸ்ஏ சட்டத்தின் கீழ் மின்னணு ஆவணங்களை சான்றழிக்க ஒரு சில நிறுவனங்களே இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதுபோன்ற நிறுவனங்கள் அடையாளம் காணப்படவில்லை. தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பத்துறையில் சிறப்பான கட்டமைப்பு உள்ளது. தகவல் தொழில்நுட்பத்துறையில் தகுதியானவர்கள் அதிகளவில் உள்ளனர்.
இருப்பினும் மின்னணு ஆவணங்களை சான்றழிக்கும் தகுதியுடைய நிறுவனங்கள் அடையாளம் காணப்படவில்லை. பிஎஸ்ஏ சட்டம் அமலுக்கு வந்துவிட்டது. இதனால் விரைவில் மின்னணு ஆவணங்களை சான்றழிக்கும் நிபுணர்கள் தேவைப்படுவர். எனவே, விரைவில் மின்னணு ஆவணங்களுக்கு சான்றழிக்க நிபுணர்கள்/ நிறுவனங்களை அறிவிக்க வேண்டும். அவ்வாறு அறிவிக்கப்படும் நிபுணர்கள் எண்ணிக்கை போதுமான அளவில் இருக்க வேண்டும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் நிபுணர்கள் இருப்பது நல்லது. இந்த நடவடிக்கையை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை 3 மாதத்தில் செயல்படுத்த வேண்டும். இந்த வழக்கில் கணவர் தாக்கல் செய்த மனைவியின் செல்போனில் அழைப்பு விபரங்கள் தனியார் தொலைபேசி இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இது மனைவியின் தனியுரிமையை மீறிய செயலாகும்.
மனைவியின் செல்போன் அழைப்பு பதிவேட்டை கணவர் திருட்டுத்தனமாக பெற்றுள்ளது தெளிவாகிறது. திருமண உறவின் அடித்தளமே நம்பிக்கை தான். ஒருவொருக்கொருவர் முழுமையான உண்மை மற்றும் நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும். ஒருவரை ஒருவர் சந்தேகிப்பது திருமண வாழ்க்கையின் கட்டமைப்பை சீரழித்துவிடும். பெண்ணுக்கு தனியுரிமை உள்ளது. பெண் டைரி எழுதலாம். அதில் சிந்தனை, உணர்வுகளை எழுதலாம். அந்த டைரியை தனது சம்மதம் இல்லாமல் கணவர் படிக்கக்கூடாது என எதிர்பார்க்கும் உரிமை மனைவிக்கு உள்ளது. டைரி, உயிலுக்கு பொருந்தும் அனைத்து உரிமைகளும் செல்போன்களுக்கும் பொருந்தும்.
தற்போது உச்ச நீதிமன்றம் மனைவியை விருப்பத்துக்கு மாறாக உறவு கொள்வது பலாத்காரம் ஆகும் எனக் கூறியுள்ளது. அதே போல் மனைவியின் ஒப்புதல் இல்லாமல், அவருக்கு தெரியாமல் அவரது தனியுரிமை தொடர்பான தகவல்களை பெறுவதை கண்ணியமாக பார்க்க முடியாது. மனைவியின் தனியுரிமை உட்பட அனைத்து தனியுரிமைகளும் அடிப்படை உரிமைகள் தான். அந்த தனியுரிமையை மீறி பெறப்பட்ட ஆதாரங்களை ஏற்க முடியாது. இதனால் கீழமை நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது” என நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.