நெல்லையில் களைகட்டிய தீபாவளி விற்பனை - முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல்


திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் கடைசிகட்ட தீபாவளி விற்பனை இன்று களைகட்டியிருந்தது. கடைவீதிகளில் மக்கள் திரண்டு பொருட்களை வாங்கிச் சென்றதால் கூட்டம் அதிகமிருந்தது. இதனால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் சென்னை, கோவை உள்ளிட்ட வெளியூர்களில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு ஏராளமானோர் பேருந்துகளிலும், ரயில்களிலும் வந்தனர். இதனால் கடந்த சில நாட்களாக பேருந்து நிலையங்களிலும், திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்திலும் பயணிகள் கூட்டம் அதிகமிருந்தது. திருநெல்வேலி வேய்ந்தான்குளம் புதிய பேருந்து நிலையத்தில் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வந்த வண்ணம் இருந்தனர்.

சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பெரும்பாலானோர் ரயில்கள் மூலமாக சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தனர். இதனால் அதிகாலையிலிருந்த ரயில் நிலையம் பயணிகள் கூட்டத்தால் சுறுசுறுப்பாக காணப்பட்டது. பயணிகள் பட்டாசுகளை கொண்டு வருகிறார்களாக என்று ரயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை மேற்கொண்டனர். அங்கிருந்து தாழ்தள பேருந்துகளில் புதிய பேருந்து நிலையத்துக்கு பயணித்தனர்.

தீபாவளிக்கு ஜவுளிகள், பட்டாசுகள், உணவுப் பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக திருநெல்வேலி மாநகரிலும், வள்ளியூர், திசையன்விளை, அம்பாசமுத்திரம், நாங்குநேரி உள்ளிட்ட பகுதிகளிலும் உள்ள கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அதிகமிருந்தது. திருநெல்வேலி வடக்கு ரதவீதியில் வழக்கம்போல் நெரிசல் காணப்பட்டது. கடைவீதிகளில் மக்கள் அதிகம் திரண்டதை அடுத்து அசம்பாவிதங்களை தடுக்க போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

மோட்டார் சைக்கிள்களில் சென்றும் போலீஸார் கண்காணித்தனர். மாநகர பகுதியில் நேற்று நள்ளிரவு வரையிலும் தீபாவளி விற்பனை சூடுபிடித்தது. பாளையங்கோட்டையில் சமாதானபுரம் மார்க்கெட் முதல் வண்ணார்பேட்டை, முருகன்குறிச்சி, சந்திப்பு, டவுன் ரதவீதிகள் வரை கடைகளில் பொதுமக்கள் அதிக அளவில் காணப்பட்டனர். இதனால் டவுன், பாளையங்கோட்டையில் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

தீபாவளியை முன்னிட்டு திருநெல்வேலியில் பூக்கள் விலை அதிகரித்திருந்தது. நேற்று ரூ.1000-க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகை இன்று பகலில் ரூ.1500-க்கும், ரூ.1000-க்கு விற்பனை செய்யப்பட்ட பிச்சி ரூ.1300-க்கும், ரூ.1000-க்கு விற்பனை செய்யப்பட்ட கனகாம்பரம் ரூ.1500-க்கும் விற்பனையானது.

x