திருப்பூர்: 'மாநகராட்சியாக உருவாகி 16 ஆண்டுகளாகியும், குப்பை கொட்ட பாறைக்குழியை தேடும் நிலை இருப்பதாக' நேற்று செய்தி வெளியான நிலையில், தீபாவளிக்கு வீதிகளில் குப்பை தேங்கும் முன்பே ஏற்கெனவே தேங்கியுள்ள குப்பைகளை அப்புறப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய திருப்பூர் நகரத்து மக்கள் சிலர், ''திருப்பூர் மாநகரில் ஆயுதபூஜைக்கு பிறகு ஒவ்வொரு வீதியிலும், குப்பை மலை போல் தேங்கிக்கிடக்கிறது. தொடர்ந்து அள்ளுவதற்கு போதிய தூய்மைப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, வார்டு தோறும் குப்பை அள்ளப்பட வேண்டும். தீபாவளி பண்டிகை நாளை (அக். 31) கொண்டாடப்படும் நிலையில், மேலும் பல மடங்கு குப்பை தேங்கும். ஏற்கெனவே பல்வேறு வீதிகளில் குப்பை அள்ளாமல், தெருக்களில் வந்து வாகன ஓட்டிகளுக்கும், பாதசாரிகளுக்கும் நடக்க முடியாத நிலை உள்ளது.
ஆயுத பூஜைக்கு பிறகு குப்பை கொட்ட இடம் தேர்வு, தொடர் மழை, தற்போது தீபாவளி என தொடர்ந்து குப்பைகள் வீதிகளில் தேங்குவதற்கு காரணங்கள் வரிசைகட்டி நிற்கின்றன. திருப்பூர் மாநகரில் 60 வார்டுகளிலும் தேங்கியுள்ள குப்பையை அகற்றினால் மட்டுமே, மக்கள் நிம்மதியாக பண்டிகையை கொண்டாட முடியும். இல்லையென்றால் நோய்த்தொற்றுக்கு ஆளாவதை தவிர்க்க முடியாத நிலையே ஏற்படும்'' எனத் தெரிவித்தனர்.
திருப்பூர் மாநகர் 30-வது வார்டு மில்லர் பேருந்து நிறுத்தம் எதிரில் சாலை முழுவதும் குப்பை கொட்டப்பட்டு, அந்த பகுதியே பயன்படுத்த முடியாத நிலைக்கு இருப்பதாக அப்பகுதி இல்லத்தரசிகள் தெரிவித்தனர். அதேபோல் காந்திநகர் இ.பி காலனி உள்ளிட்ட பகுதிகளிலும் சேகரிக்கப்பட்ட குப்பை அப்படியே ஆங்காங்கே கொட்டி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேற்கண்ட பகுதியை சேர்ந்தவர்கள் கூறும்போது, ''சாலையில் நடக்கவே வழி இல்லை. அந்தளவுக்கு குப்பை சாலை முழுவதும் ஆக்கிரமித்துள்ளது. திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகள் இப்படித்தான் உள்ளன. சாலையில் நடக்கும் போது, இருசக்கர வாகனங்களில் கடக்கும்போது கடும் துர்நாற்றம் வீசுகிறது. அதே இடத்தில் கடைகளும் உள்ளன. எப்படி கடும் துர்நாற்றத்தை சகித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. அந்தளவுக்கு நிலைமை படுமோசமாக அங்கு இருக்கிறது'' என்றனர்.
இது தொடர்பாக மாநகராட்சி கவுன்சிலர் ஒருவர் கூறும்போது, ''பாறைக்குழி இடம் தேர்வை காரணங்காட்டி, வார்டுதோறும் குப்பை எடுக்க தாமதம் ஏற்பட்டது. தற்போது பல்வேறு வீதிகளிலும் குப்பை எடுக்க முடியாத அளவுக்கு தேங்கிக் கிடக்கிறது. அதேபோல் ஒவ்வொரு வார்டுக்கும் தூய்மைப் பணியாளர்கள் தேவைக்கு ஏற்ப இல்லை. இதனால் போதிய அளவிலும், கூடுதல் வேகத்திலும் குப்பை எடுக்க முடிவதில்லை. இதனால் பல்வேறு வீதிகளிலும் குப்பை தேங்கிக் கிடக்கிறது'' என்றார்.
மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் கூறும்போது, ''திடக்கழிவு மேலாண்மையில் பல்வேறு கட்டங்களாக முன்னேற வேண்டி உள்ளது. மக்கும் குப்பை, மக்காத குப்பை ஆகியவற்றை தரம்பிரித்து வழங்க, வார்டுதோறும் போதிய முன்னேற்பாடும், மக்களுக்கு பயிற்சியும் தர வேண்டும். திருமணம் மற்றும் விஷேச காலங்களில் பல மடங்கு குப்பை அதிகரிக்கிறது. தனியார் மண்டபங்களில் திருமண விழாக்களின் போது அதிக குப்பை தேங்குகிறது. பனியன் நிறுவனங்கள் உட்பட வணிக நிறுவனங்களுக்கான குப்பை வரி அதிகளவில் வசூலிக்கும்போது, அந்த குப்பையை முறையாக பிரிக்க வேண்டிய தேவையும் உள்ளது.
குடிநீர் பாட்டில்கள் துவங்கி, பயன்படுத்தப்பட்ட இலை வரை குப்பையை தரம்பிரித்து அனுப்ப தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பூர் மாநகரில் தீபாவளி பண்டிக்கைக்கு பிறகு குப்பை பெரிய அளவில் தேங்கும். ஏற்கெனவே பல்வேறு வீதிகளில் குப்பை இருப்பதால், தொடர்ந்து போதிய வேகத்துடன் மாநகராட்சி களம் இறங்கினால் மட்டுமே, மாநகரின் சுகாதாரம் காக்கப்படும்'' என்றார்.
திருப்பூர் மாநகராட்சி ஆணையர் (பொ) சுல்தானா கூறும்போது, ''திருப்பூர் மாநகரில் குப்பை ஆங்காங்கே தேங்கியது தொடர்பாக பொதுமக்களின் புகார்கள் அடிப்படையில் குப்பை தொடர்ந்து அள்ளப்பட்டு வருகிறது. அவுட்சோர்சிங் தூய்மைப் பணியாளர்கள் 2 ஆயிரம் பேர் உள்ளனர். உடல்நலகுறைபாடு உள்ளிட்ட காரணங்களால் விடுப்பு எடுத்தவர்கள் போக, எப்படிப் பார்த்தாலும் சுமார் 1,700 பேர் தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மாநகர் முழுவதும் தேங்கியுள்ள குப்பை அப்புறப்படுத்த பணிகள் வேகப்படுத்தப்படும்'' என்றார்.