விழுப்புரம் கடைவீதிகளில் தீபாவளி பண்டிகையொட்டி  மக்கள் கூட்டம்: போக்குவரத்து நெரிசல்  


விழுப்புரம் மகாத்மா காந்தி சாலையில் மக்கள் வெள்ளம்.

விழுப்புரம்: தீபாவளி பண்டிகையையொட்டி ஜவுளிகள், பட்டாசுகள், அலங்கார அணிகலன்களை வாங்குவதற்காக குவிந்த பொதுமக்களால் இன்று விழுப்புரம் கடைவீதிகள் திணறியது.

விழுப்புரம் நகரிலுள்ள கடைவீதிகளுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஜவுளி மற்றும் பிற பொருட்களை வாங்க ஒரே நேரத்தில் திரண்டதால் நகரில் திரும்பிய பக்கமெல்லாம் ஜன திரளாகக் காணப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கிராமப்புற மக்கள் தீபாவளி பண்டிகைக்கு குடும்பத்துக்குத் தேவையான புத்தாடைகள் உள்ளிட்டவற்றை வாங்கினர். இதனால் ஜவுளிக் கடைகள், வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனை கடைகள், இனிப்பகங்கள் உள்ளிட்ட இடங்களில் மும்முரமாக விற்பனை நடைபெற்றது.

நகரின் பல்வேறு பகுதிகளிலுள்ள இறைச்சிக் கடைகளிலும் ஆடு கோழி போன்ற இறைச்சிகளின் விற்பனை இன்றே மும்முரமாக நடைபெற்றது. அனிச்சம்பாளையத்திலுள்ள மொத்த மற்றும் சில்லறை மீன் விற்பனை அங்காடியிலும் தீபாவளி சிறப்பு விற்பனை நடைபெற்றது. தீபாவளி பண்டிகைக்காக சென்னையிலிருந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்புப் பேருந்துகளை அரசு இயக்கி வருகிறது.

நேற்று இரவு முதல் அதிகளவிலான பொதுமக்கள் பேருந்துகளில் பயணித்தனர். இதனால் வழக்கத்தைக் காட்டிலும் பேருந்துகள் அதிகரித்து காணப்பட்டன. விழுப்புரம் வழியாக தென்மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரயில்களிலும் படியில் பயணித்தவாறு பொதுமக்கள் பயணம் செய்து வருகின்றனர். சென்னையிலிருந்து வரும் பேருந்துகளிலும், சிறப்புப் பேருந்துகளிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

மக்கள் கூட்டத்தை பொருத்து, விழுப்புரத்திலிருந்து திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி போன்ற ஊர்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே, வழிபறி உள்ளிட்ட குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் போலீஸார் உயர்கோபுரக் கூண்டு அமைத்து கூட்டத்தை கண்காணித்து வருகின்றனர். நகரின் பெரும்பாலான துணிக் கடைகளில் கட்டுக்கடங்காத கூட்டம் இருந்து வருகிறது. இதனால் மக்கள் கடைகளுக்கு வெளியே காத்திருந்து பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். அதேபோல் நகருக்குள் அதிகளவிலான வாகனங்கள் வந்தால் பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

x