திருப்பூர்: திருப்பூரிலிருந்து தீபாவளியை கொண்டாட சொந்த ஊர்களுக்கு தொழிலாளர்கள் புறப்பட்டுச் சென்றனர்.
இந்நிலையில் இன்று கடைகளில் புத்தாடைகள் மற்றும் பட்டாசுகள் மற்றும் பல்வேறு பொருட்கள் வாங்க மக்கள் திரண்டதால் மாநகரில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பின்னலாடை தொழிலாளர் நகரமான திருப்பூரில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பல லட்சம் பேர் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் தீபாவளி பண்டிகையை கொண்டாட தங்களது சொந்த ஊர்களுக்கு கடந்த 2 நாட்களாக அவர்கள் சென்று வருகின்றனர். பனியன் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் போனஸ் பெற்ற கையோடு, புத்தாடைகள் மற்றும் பட்டாசுகள் வாங்கிக்கொண்டு சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர்.
இதனால் மாநகரில் இன்று பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் உண்டானது. பலர் நேற்று இரவு போதிய பேருந்து வசதி இன்றி பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் திருச்சி, தஞ்சை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு போதிய பேருந்துகள் இயக்கப்படாததால், பயணிகள் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்தனர். அவர்கள் போலீஸார் ஏற்படுத்தியிருந்த காவல் தடுப்புகளில் வரிசையில் நின்று, பேருந்துகளில் இருக்கைகளை பிடித்து சொந்த ஊர்களுக்குச் சென்றனர்.
திருப்பூர் மாநகரில் அவிநாசி சாலை, குமரன் சாலை, தாராபுரம் சாலை, காங்கயம் சாலை, பல்லடம் சாலை மற்றும் ஊத்துக்குளி சாலை உட்பட நகரின் அனைத்து முக்கிய சாலைகளும் பொதுமக்கள் நடமாட்டத்தால் இன்று நிரம்பி வழிந்தது. திருப்பூர் மத்திய பேருந்து நிலையம், புது மார்க்கெட் வீதிகளில் ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு புதுத்துணிகளை வாங்கிக் கொண்டு சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர்.
அதேபோல் பலர் இருசக்கர வாகனங்களில் சொந்த ஊர்களுக்குச் சென்றனர். இதனால் புது மார்க்கெட் வீதி, மாநகராட்சி அலுவலகம், குமரன் சாலை, பூங்கா சாலை, ரயில்நிலையம், புஷ்பா திரையரங்க வளைவு, பெருமாநல்லூர் சாலை உட்பட பல்வேறு பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.