ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் நரசிங்கக்கூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், தீபாவளி சமயத்தில் விபத்தின்றி வெடி வெடிக்க மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
பொட்டு மற்றும் ரோல் வெடியை கையால் அழுத்தி வெடிக்கக் கூடாது. துப்பாக்கியால் மட்டுமே வெடிக்க வேண்டும். வெடிக்கும் வெடிகளை நீண்ட ஊதுபத்தி கொண்டு தள்ளி நின்று வெடிக்க வேண்டும். புஸ்வாணம் வெடியை அருகில் நின்று வெடிக்கக்கூடாது. கம்பி மத்தாப்புகளை கொளுத்தும் போது ஆடையில் நெருப்பு பட்டு விடாமல் தள்ளி வைத்து கொளுத்த வேண்டும்.
அதேபோல் கொளுத்திய கம்பியை தண்ணீர் உள்ள வாளியில் போட வேண்டும். இல்லையேல் கம்பி காலில் சுட்டு விட வாய்ப்பு உள்ளது. முடிந்தவரை சுற்றுச் சூழலை மாசுபடுத்தாத வெடிகளை வெடித்து மகிழ வேண்டும் என மாணவர்களிடம் வலியுறுத்தப்பட்டது.
வெடி வெடித்த பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. மாணவர்கள் ஒருவருக்கொருவர் தீபாவளி வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் தலைமையாசிரியர் ச.கிறிஸ்து ஞான வள்ளுவன், இடைநிலை ஆசிரியர் இரா.ஜெஸிந்தா ஆகியோர் செய்திருந்தனர்.