நாகப்பட்டினம்: நாகை அருகே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சிறுமி எரித்துக் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வழக்கை முறையாக விசாரணை செய்யாத வேளாங்கண்ணி பெண் காவல் ஆய்வாளர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதியன்று 13 வயது சிறுமி ஒருவர் உடல் எரிந்த நிலையில் வீட்டின் மொட்டை மாடியில் பிணமாக கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற வேளாங்கண்ணி போலீஸார், சிறுமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்த அந்தச் சிறுமி எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தற்கொலை வழக்காக பதிவு செய்த வேளாங்கண்ணி காவல் ஆய்வாளர் விசித்ரா மேரி, அந்த வழக்கை முறையாக தொடர்ந்து விசாரணை செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சிறுமியின் உடற்கூறாய்வு முடிவில் அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதனைத் தொடர்ந்து சிறுமி கொலை வழக்கில் முறையான விசாரணையை மேற்கொள்ளாத வேளாங்கண்ணி காவல் ஆய்வாளர் விசித்ரா மேரி தஞ்சை சரக டிஐஜி-யான ஜியாவுல்ஹக் உத்தரவின் பேரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் முறையான விசாரணையை மேற்கொள்ள மாவட்ட காவல்துறை சார்பில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் வேளாங்கண்ணி காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.