சென்னை: சாலை விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக முதல்வர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்துவந்த சத்தியமூர்த்தி (27), கடந்த 26-ம் தேதி இரவு 8 மணி அளவில் அரசியல் கட்சி ஒன்று நடத்திய மாநாட்டின் பாதுகாப்பு பணிக்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அய்யூர் அகரம் மேம்பாலம் அருகே சென்றபோது கார் மோதியதில் பலத்த காயமடைந்து சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன். காவலர் சத்தியமூர்த்தியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதியாக வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.