புதுடெல்லி: சர்தார் வல்லபாய் படேலுக்கு பாரத் ரத்னா விருது தராமல் நீண்டகாலம் இழுத்தடித்தனர் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார்.
சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினமான அக்டோபர் 31-ம் தேதி தேசிய ஒற்றுமை தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அந்தத் தேதியில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. எனவே, 2 நாள் முன்னதாக படேலின் நினைவாக தலைநகர் டெல்லியில் உள்ள மேஜர் தயான்சந்த் மைதானத்தில் ஒற்றுமை தொடர் ஓட்டத்தை மத்திய அமைச்சர் அமித் ஷா நேற்று தொடங்கி வைத்தார். இந்த தொடர் ஓட்டத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் கலந்துகொண்டனர்.
பின்னர் விழாவில் மத்திய அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 550-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்கள், இந்திய யூனியனுடன் இணைக்கப்பட்டு நாடு ஒன்றுபட்டதற்கு நாட்டின் முதல் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் படேலின் தொலைநோக்குப் பார்வையும், புத்திசாலித்தனமுமே காரணம். லட்சத்தீவுகள், ஜுனகர், ஹைதராபாத் உள்ளிட்ட அனைத்து சமஸ்தானங்களும் இந்தியாவுடன் இணைக்கப்பட்டதற்கு சர்தார் வல்லபாய் படேல்தான் காரணம்.
ஆனால், படேல் விட்டுச் சென்ற பாரம்பரியத்தை அழிக்கவும், அவற்றை குறைமதிப்புக்கு உட்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நீண்ட காலமாக அவருக்கு பாரத ரத்னா வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டது. 1950-ல் இறந்த வல்லபாய் படேலுக்கு 41 ஆண்டுகள் கழித்து 1991-ல்தான் நாட்டின் உயரிய சிவிலியன் விருதான பாரத ரத்னா வழங்கப்பட்டது.
ஆனால், நமது பிரதமர் நரேந்திர மோடி, படேலின் மிக உயரமான சிலையை குஜராத்தின் கெவாடியாவில் நிறுவி அவருக்கு உரிய முறையில் மரியாதை செய்தார். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை முழு வளர்ச்சியடைந்த நாடாக மாற்றும் பிரதமரின் கனவை நிறைவேற்ற, நாட்டு மக்கள் தற்போது ஒன்றுபட்டுள்ளனர். இதற்காக தங்களை அர்ப்பணித்துள்ளனர். 2047-ம் ஆண்டுக்குள் அனைத்து அம்சங்களிலும் இந்தியா உலகின் முன்னணி நாடாகத் திகழும். இவ்வாறு மத்திய அமைச்சர் அமித் ஷா பேசினார்