சென்னை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அரசு நிகழ்வுகளில் பங்கேற்கும்போது கட்சி சின்னம் பொறித்த டி-ஷர்ட் அணிய எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில், அரசு ஊழியர்களுக்கான ஆடை கட்டுப்பாடு குறித்த அரசாணை அரசியலமைப்பு சட்டரீதியாக பதவி வகிப்பவர்களுக்கும் பொருந்துமா என்பது குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை சேலையூரைச் சேர்ந்த வழக்கறிஞர் எம்.சத்யகுமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு: அனைத்து அரசு ஊழியர்களும் முறையான, கலாச்சார, பாரம்பரியரீதியாக ஆடை அணிந்துவர கட்டுப்பாடுகளை விதித்து கடந்த 2019-ம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. ஆனால் தமிழக துணை முதல்வரான உதயநிதி ஸ்டாலின் அரசு நிகழ்வுகளில் பங்கேற்கும்போது கட்சியின் உதயசூரியன் சின்னம் பொறித்த டி-ஷர்ட் அணிந்து பங்கேற்பது என்பது ஏற்புடையதல்ல. அரசாணையை மீறுவதாகும்.
அரசியலமைப்பு சட்டத்துக்கும் விரோதமானது என்பதால் அரசு நிகழ்வுகளில் பங்கேற்கும்போது அவர் கலாச்சார ரீதியாக முறையான ஆடைகளை அணிய உத்தரவிட வேண்டும். அரசு நிகழ்வுகளில் பங்கேற்கும்போது கட்சியின் சி்ன்னம் பொறித்த டி-ஷர்ட் அணிய தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, துணை முதல்வர் கட்சியின் சி்ன்னம் பொறித்த டி-ஷர்ட் அணிவது மரபு கிடையாது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. அப்போது அரசு தலைமை வழக்கறிஞரான பி.எஸ்.ராமன் ஆஜராகி, தமிழக அரசின் ஆடை கட்டுப்பாடு தொடர்பான அரசாணை அரசு ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும், என விளக்கமளித்தார்.
அதையடுத்து நீதிபதிகள், அரசு ஊழியர்களுக்கான ஆடை கட்டு்ப்பாடு குறித்த அரசாணை அரசியலமைப்பு சட்டரீதியாக பதவி வகிப்பவர்களுக்கும் பொருந்துமா என்பது குறித்தும், டி-ஷர்ட் கேஷூவல் உடையா, முதல்வர் மற்றும் அமைச்சர்களாக பதவி வகிப்பவர்களுக்கும் ஆடை கட்டு்ப்பாடு உள்ளதா என்பது குறித்தும் தமிழக அரசு தரப்பில் விளக்கமளிக்க உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்தனர்