சென்னை: நடிகர் விஜய் கட்சியுடன் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் அதிமுக தலைமையகத்துக்கு நேற்று வந்த அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த நலிந்த தொழிலாளர்கள் மற்றும் மரணமடைந்த தொழிலாளர்கள் 167 பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.1 கோடியே 67 லட்சம் நிதியுதவியை வழங்கினார். நிகழ்வில், அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, சி.பொன்னையன், வைகைச்செல்வன், கோகுல இந்திரா, பா.வளர்மதி, தொழிற்சங்க பேரவைச் செயலாளர் ஆர்.கமலகண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பழனிசாமி கூறியதாவது: தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர், உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். சென்னையில் உள்ள பல்வேறு பூங்கா, மைதானங்களை தனியாருக்கு வழங்கும் ஏற்பாடு கண்டிக்கத்தக்கது. இளைஞர்களின் நலன் கருதி மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும்.
வளர்ச்சி என பேசும் முதல்வர் ஸ்டாலின், என்ன திட்டத்தை கொண்டு வந்தார். அதிமுக அரசு கொண்டு வந்த திட்டங்களைக் கூட முடக்கி வைத்தனர். அதிமுக அரசால் அடிக்கல் நாட்டப்பட்ட மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தை கூட அவர்களால் செயல்படுத்த முடியவில்லை. எப்போது பார்த்தாலும் அவர்கள் உதவி செய்யவில்லை என்கின்றனர். திமுகவின் மக்கள் விரோத போக்கை சுட்டிக்காட்டி வருகிறோம். அதற்கான ஆதரவு பெருகி வருவதாலேயே அதிமுகவின் பாணியை நடிகர் விஜய்யும் பின்பற்றுகிறார் என்ற கருத்து எழுகிறது.
திமுக, பாஜக இடையே மறைமுக உறவு இருக்கிறது என நாங்கள் சொல்லி வந்தோம். இப்போது பலரும் சொல்லத் தொடங்கிவிட்டனர். முன்னாள் முதல்வர் மறைந்த எம்ஜிஆர் போல நாமும் நடக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் விஜய் பேசியுள்ளார். அதிமுக சிறப்பாக செயல்படுவதால் அவர் விமர்சிக்கவில்லை. கொள்கை அடிப்படையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதிமுகவை பொருத்தவரை கூட்டணி வேறு, கொள்கை வேறு. இப்போது தான் விஜய் கட்சித் தொடங்கியுள்ளார்.
அதிமுக நிலைப்பாடு மற்றும் அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப ஒருமித்த கருத்துள்ள கட்சிகளுடன் வலிமையான கூட்டணி அமைக்கப்படும். 2026-ல் ஆட்சியமைத்து மக்களுக்கான திட்டங்களைத் தொடர்வோம். மக்கள் நல பணிகளை முன்னிறுத்தி, சட்ட ஒழுங்கை காப்பதோடு போதைப் பொருளை ஒழிக்க நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு பழனிசாமி தெரிவித்தார்