ஆக்கப்பூர்வமற்ற விமர்சனங்களை கடந்து செல்வோம்: தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்து விஜய் கடிதம்


சென்னை: விக்கிரவாண்டியில் நடைபெற்ற மாநாட்டை வெற்றி பெறச் செய்ததற்கு தொண்டர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக தவெக தலைவர் நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். ஆக்கப்பூர்வமற்ற விமர்சனங்களை கடந்து செல்ல பழகிக் கொள்வோம் என்றும் தொண்டர்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக, கட்சியின் தலைவர் விஜய் நேற்று வெளியிட்ட அறிக்கை: மாநாடு குறித்து உங்களுடன் பேச இது 4-வது கடிதம். வாஞ்சையில் நனைந்த வார்த்தைகளில் ஒரு நன்றிக் கடிதம். இந்தக் கடிதம் எழுதும் போது என்னென்னவோ எண்ண அலைகள் இதயத்தில் அலைமோதுகின்றன. என் நெஞ்சம் நிறைந்ததில் எதை சொல்வது, எதை விடுப்பது?

மாநாடு நடத்த பல்வேறு காரணங்களால் நமக்கு கிடைத்தது மிகக் குறைந்த கால இடைவெளிதான். அதிலும் அடைமழை வேறு குறுக்கிட்டது. இருந்தும் எல்லாவற்றையும் சமாளித்து, சூறாவளியாக சுழன்று நம் கழகத்தின் முதல் மாநாட்டை வெற்றி பெறச் செய்த உங்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த நன்றி. அதேபோல, தமிழக அரசியல் களத்தில் நமக்காக நம் தோளோடு தோள் சேர்த்து நிற்பதை உறுதி செய்வது போல, தங்களின் பேரன்பையும், பேராதரவையும் தெரிவிக்கும் வகையில், மாநாட்டுக்கு பேரலைகளாக எழுந்து வந்த பொதுமக்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளை தேடி கண்டுபிடிக்க இயலாமல் மவுனமொழி பேசி கண்கள் கலங்க நிற்கிறேன்.

நம் மக்களோடு சேர்த்து, தொண்டர்களையும் உயரத்தில் வைத்து அழகு பார்க்கவே இந்த அரசியல் பயணம். நம்முடைய அரசியல் பயணத்தை நாம் தொடங்கும் முன்னரே நம்மை விமர்சித்தவர்கள், இனி இன்னும் கடுமையாக விமர்சிப்பார்கள். அத்தகைய விமர்சனங்களில் ஏதேனும் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் தெரிந்தால், அவற்றை மட்டும் கருத்தில் கொள்வோம். மற்றவற்றை மறந்தும் கூட மனதில் ஏற்றிவிடாமல் கடந்து செல்லப் பழகிக் கொள்வோம்.

அனைத்து மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நோக்கிய உழைப்பு மட்டுமே இனி நம் அரசியல். அதை சாத்தியப்படுத்துதல் மட்டுமே நம் தீவிர அரசியல் செய்தலாக இருக்கும். நம்மை தாயுள்ளத்தோடு வரவேற்கும் நம் தமிழ்நாட்டு மக்களுக்காக இன்னும் தீவிரமாக, தீர்க்கமாக, தீர்மானமாக உழைப்போம். நம்மை தக்க இடம் நோக்கி தகுதியான அங்கீகாரம் நோக்கி மக்களே அழைத்துச் செல்வர். எனவே, அவர்களின் மனதில் நிறையும் அளவுக்கு அதிக நம்பிக்கையுடனும், நன்றியுடனும் ரெட்டைப் போர் யானைகளின் பலத்துடன் உழைப்போம்.

நமது மாநாட்டின் மூலம் வி.சாலை நமது வியூகச் சாலையாகவும், விவேக சாலையாகவும் மற்றும் வெற்றி சாலையாகவும் ஆனது. நம்மை யாராலும் வெல்ல இயலாத வித்தியாசமான, யதார்த்த அரசியல் சாலைக்கும் நம்மை அழைத்துச் செல்லும். எப்போதும் ஆக்கப்பூர்வமான அரசியலையே கையிலெடுப்போம். 2026-ல் நம் இலக்கை அடைவோம். இவ்வாறு விஜய் தெரிவித்துள்ளார்.

சுற்றுப்பயணம்: இதற்கிடையே, மாநாடு முடிந்த நிலையில் தீபாவளி முடிந்த பிறகு கட்சி நிர்வாகிகளுடன் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து விஜய் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிகிறது. தற்போது விஜய் 69-வது படத்தில் நடித்து வருகிறார். அடுத்த ஆண்டு மே மாதம் படப்பிடிப்பு முடியும் என கூறப்படுகிறது. அதன்பிறகு, 234 தொகுதிகளிலும் விஜய் சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களை சந்திக்க உள்ளார். இதன்மூலம், 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான வெற்றி வியூகங்களை அவர் வகுக்க உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

x