மதுரை: இந்திய அரசுத் துறைகளில் இளைஞர்கள் உத்வேகத்துடன் செயல்பட ரோஜ்கர் மேளா நடத்தப்பட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. மத்திய அரசின் முன்னோடி திட்டங்களில் இதுவும் ஒன்று என மத்திய அமைச்சர் பூபதிராஜூ ஸ்ரீனிவாச வர்மா தெரிவித்தார்.
பிரதமர் மோடி இன்று ரோஜ்கர் மேளா மூலம் இந்தியா முழுவதும் 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழாவை காணொலி மூலம் தொடங்கி வைத்தார். அதனையொட்டி இந்திய அஞ்சல் துறையின் மதுரை மண்டலம் சார்பில் ரோஜ்கர் மேளா தென்மண்டல அஞ்சல் துறைத் தலைவர் வி.எஸ்.ஜெயசங்கர் தலைமையில் மதுரை மடீட்சியா அரங்கத்தில் இன்று நடைபெற்றது.
இவ்விழாவில் மத்திய அமைச்சர் பூபதிராஜூ ஸ்ரீனிவாச வர்மா சிறப்பு விருந்தினராக பங்கேற்று 137 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், ''நாட்டின் வளர்ச்சிக்காகவும், மேம்பாட்டிற்காகவும் இளைஞர் சக்தியை ஒன்று திரட்டி இந்திய அரசுத் துறைகளில் இளைஞர்கள் உத்வேகத்துடன் செயல்படுவதற்கு மத்திய அரசு ரோஜ்கர் மேளா நடத்தி வருகிறது. மத்திய அரசின் முன்னோடி திட்டங்களில் இதுவும் ஒன்று.
மத்திய அரசுத் துறைகளில் சேவையாற்றும் இளைஞர்கள் பிரதமர் மோடியின் கைகளால் பணி நியமன ஆணைகளை பெற்று பணியில் சேருவது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்தியா முழுவதும் இன்று 40 இடங்களில் நடைபெறும் ரோஜ்கர் மேளா மூலம் 51 ஆயிரம் இளைய சமுதாயத்தினர் பணியில் சேர்ந்து நாட்டிற்கு சேவையாற்றவுள்ளனர். அதில் மதுரை மண்டலத்தில் மட்டும் 137 பேர் பணி நியமன ஆணை பெற்றுள்ளனர்'' என்றார்.
இன்றைய நிகழ்ச்சியில், இந்திய அஞ்சல் துறையில் 120 பேர், ஃபுட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் ஒருவர், என்ஐடி புதுச்சேரியில் 9 பேர், தென்னக ரயில்வேயில் 7 பேர் உள்பட மொத்தம் 137 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.