கோவை மாவட்டத்தில் வாக்காளர்கள் எண்ணிக்கை 31,49,239 ஆக உயர்வு - வரைவு பட்டியல் வெளியீடு


கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் முன்னிலையில் ஆட்சியர் கிராந்திகுமார் பாடி இன்று வெளியிடப்பட்டார். படம்: ஜெ.மனோகரன்

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் முன்னிலையில் இன்று வெளியிடப்பட்டது.

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். இது குறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "தற்போது வெளியிடப்படும் வரைவு வாக்காளர் பட்டியலின்படி கோவை மாவட்டத்தில் 15,43,073 ஆண்கள், 16,05,516 பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் 650 பேர் என ஆக மொத்தம் 31,49,239 வாக்காளர்கள் உள்ளனர்.

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், பெயர், வயது உள்ளிட்டவைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளுதல், மற்றும் வாக்காளர் பெயருடன் ஆதார் எண் இணைத்தல் ஆகிய சிறப்பு சுருக்கத் திருத்தப்பணிகள் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் மேற்கொள்ளப்படும். இதற்காக வாக்காளர்கள் அக்டோபர் 29ம் தேதி முதல் நவம்பர் 28ம் தேதி வரை விண்ணப்பங்களை நேரில் அளிக்கலாம்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி நவம்பர் 16ம் தேதி (சனிக்கிழமை), நவம்பர் 17ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் நவம்பர் 23ம் தேதி (சனிக்கிழமை), நவம்பர் 24ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளில் உள்ள அனைத்து நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும்.

2025ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியில் 18 வயதை பூர்த்தி செய்பவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை புதியதாக சேர்க்கவும், வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளில் திருத்தம் செய்யவும் மற்றும் பெயர்கள் நீக்கம் செய்ய விரும்புவோர் www.vsp.in என்ற இணையதளம் மூலமாகவும், ‘Voter Helpline’ என்ற மொபைல் செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல் மற்றும் ஆதார் எண் இணைத்திட நவம்பர் 28ம் தேதி வரை மனுக்கள் பெறப்படும்" என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2024 மார்ச் 27ம் தேதி கோவை மாவட்ட வாக்காளர் பட்டியல் வெளியிட்டபோது வாக்காளர்கள் எண்ணிக்கை 31 லட்சத்து 14 ஆயிரத்து 118 ஆக இருந்தது தற்போது அது 31,49,239 ஆக அதிகரித்துள்ளது.

x