புதுச்சேரி: புதுச்சேரியில் வரும் 4ம் தேதி முதல் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவுள்ளதாக ஆட்சியர் குலோத்துங்கன் அறிவித்துள்ளார். மேலும், அங்கீகரிக்கப்படாத ஆட்டோ ஸ்டாண்ட், டூவீலர் வாடகை கடைகளும் அகற்றப்படவுள்ளன.
புதுவையில் சாலையோர ஆக்கிரமிப்புகள், பொது இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் பேனர்கள், கட் அவுட்கள், கொடிகளை அகற்றுவது தொடர்பாக ஆட்சியர் குலோத்துங்கன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், நகராட்சி, கொம்யூன் ஆணையர்கள், பொதுப்பணி, வருவாய்த்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், புதுவையில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகள், பேனர்கள், கட்-அவுட்டுகள், கொடிகளை அகற்றுவது என முடிவு செய்யப்பட்டது.
மேலும், பொது இடங்களில் பேனர்கள், கட்- அவுட்கள், கொடிகள் வைத்துள்ளவர்கள் தாமாக முன்வந்து அகற்ற வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். அதன் பிறகு வரும் 4ம் தேதி முதல் புதுவை நகரம், புறநகர் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள், பேனர்கள், கட்-அவுட்கள் அகற்றப்பட உள்ளது.
இதுபற்றி ஆட்சியர் அலுவலகத் தரப்பில் கூறுகையில், "வரும் 4ம் தேதி முதல் சாலையோர ஆக்கிரமிப்புகள், அங்கீகரிக்கப்படாத இருசக்கர வாகன வாடகை கடைகள், அங்கீகரிக்கப்படாத ஆட்டோ ஸ்டாண்டுகள் ஆகியவற்றை அகற்றவுள்ளோம். போலீஸார் மற்றும் பொதுப்பணித் துறையினருடன் இணைந்து நகராட்சி இப்பணிகளை செய்யவுள்ளது. வரும் 4ம் தேதி நேரு வீதி, வில்லியனூரில் இப்பணிகள் தொடங்குகிறது அதையடுத்து புதுச்சேரி நகர, கிராமப் பகுதிகளில் நடக்கும்" என்று ஆட்சியர் கூறினார்.