தீபாவளி கொண்டாட்டம்: ஆவின் பொருட்களை ரூ.120 கோடிக்கு விற்பனை செய்ய இலக்கு!


சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆவின் பாலகங்களில் சிறப்பு இனிப்பு மற்றும் கார வகைகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ரூ.120 கோடி மதிப்பில் இனிப்பு வகைகள் உள்ளிட்ட ஆவின் பொருட்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதாக ஆவின் நிறுவன மேலாண்மை இயக்குநர் வினீத் கூறியுள்ளார்.

தமிழக மக்களுக்கு பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யும் பணியில் ஆவின் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. ஆவின் வாயிலாக, தினசரி 34 லட்சம் லிட்டருக்கு மேல் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த பால் பதப்படுத்தப்பட்டு பலவகைகளில் பிரித்து விற்பனை செய்யப்படுகின்றன. இது தவிர, பால் உப பொருட்களான வெண்ணெய், நெய், தயிர், பால் கோவா உள்பட 225 வகையான பால் பொருள்களை தமிழகம் முழுவதும் உள்ள 27 ஒன்றியங்கள் வாயிலாக தயாரித்து, ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.

இது குறித்து ஆவின் நிறுவன மேலாண்மை இயக்குநர் வினீத் கூறுகையில், "ஆவின் பாலகங்களில் சிறப்பு இனிப்பு வகைகள், கார வகைகள் விற்பனை நடைபெற்று வருகிறது. நெய் பாதுஷா, நட்ஸ் அல்வா, காஜூ பிஸ்தா ரோல், காஜூ கட்லி, மோதி பாக், ஆவின் மிக்சர், பட்டர் முறுக்கு உள்ளிட்டவற்றின் விற்பனை நடைபெறுகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ரூ.120 கோடிக்கு ஆவின் இனிப்பு வகைகள் உட்பட ஆவின் பொருட்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூ.101 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த ஆண்டு 20 சதவீதம் வரை கூடுதலாக விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தீபாவளி சிறப்பு இனிப்பு வகைகளை பல்க் புக்கிங் செய்ய ஊக்கப்படுத்தப்படுகிறது. கூட்டுறவு சங்கங்கள், தனியார், அரசு அலுவலகங்களில் பல்க் புக்கிங் செய்ய ஊக்கப்படுத்தி வருகிறோம்.

இது தவிர ஆவின் உற்பத்தி மையங்களில் இனிப்பு வகைகள் உட்பட ஆவின் பொருட்கள் தரமானதாக இருக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து உள்ளோம்" என்று கூறினார்.

x