மருத்துவ மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்க- தமிழக மருத்துவ மாணவர்கள் சங்கம் வேண்டுகோள்


சென்னை: மருத்துவ மாணாக்கர்களின் பாதுகாப்பை உறுதி செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து இச்சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "அரியலூர் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த பயிற்சி மருத்துவர் மனோ ரஞ்சிதன் என்பவர் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவரது மரணம் அதிர்ச்சி அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தான், பயிற்சி மருத்துவராக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியில் சேர்ந்தார். மனோரஞ்சிதன் பணி முடித்து, தான் தங்கியிருந்த 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இடத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்ற போது இந்த கோர விபத்து நடைபெற்றுள்ளது.

அரியலூர் மருத்துவக் கல்லூரி உள்ளேயே ஆண் மற்றும் பெண் பயிற்சி மருத்துவர்களுக்கு விடுதி வசதிகள் உள்ளன. புதிதாக கட்டப்பட்ட அந்த இரண்டு விடுதிகளும் கடந்த இரண்டு ஆண்டுகளாக திறக்கப்படாமலேயே உள்ளன. அவ்விடுதிகளில் பயிற்சி மருத்துவர்கள் தங்க அனுமதிக்கப்படாததின் காரணமாக அனைத்து பயிற்சி மருத்துவர்களும் அரியலூர் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் பாதுகாப்பற்ற முறைகளில் தங்கியுள்ளனர். இது அம்மருத்துவர்களுக்கு பல்வேறு பிரச்சினைகளை உருவாக்கி வருகிறது. பெண் பயிற்சி மருத்துவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் என்ற கூடுதல் பிரச்சினையையும் உருவாக்கி வருகிறது.

அந்த விடுதிகள் பயன்பாட்டில் இருந்திருந்தால் அந்த இளம் பயிற்சி மருத்துவர் விபத்தில் இறந்திருக்க மாட்டார். மருத்துவ மாணவர்களின் பாதுகாப்பில் காட்டப்பட்ட அலட்சியமே அந்த கோர மரணத்திற்கு முக்கியக் காரணம். எனவே, அவ்விடுதிகளை உடனடியாக திறக்க வேண்டும். அவ்விடுதிகளிலேயே உணவு வசதியையும் ஏற்படுத்திக் கொடுத்திட வேண்டும். கடந்த வாரம் தான் புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூரில் மருத்துவ மாணாக்கர்களின் பாதுகாப்பு குறித்த கருத்தரங்குகள் டி.என்.எம்.எஸ்.ஏ சார்பில் நடத்தப்பட்டன.

தமிழ்நாட்டில் மருத்துவ மாணாக்கர்களுக்கு போதிய பாதுகாப்பு இருப்பதாக அரசுத் தரப்பில் கூறப்பட்டாலும், பாதுகாப்பற்ற நிலைமையை அரியலூர் கோரவிபத்து வெளிப்படுத்துகிறது. எனவே, உடனடியாக மருத்துவ மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு எடுத்திட வேண்டும் என தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது" என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x