தவெக கொள்கையை மஜக வரவேற்கிறது: மாநில பொதுச் செயலாளர் கருத்து


எஸ்.எஸ்.ஹாரூன் ரசீத்

திருச்சி: தவெக கொள்கையை ஆதரிப்பதாக மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீத் தெரிவித்தார்.

திருச்சியில் அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியது: பிளவுவாதம், ஊழல் எதிர்ப்புதான் தங்களது கட்சியின் கொள்கை என தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் அக்கட்சித் தலைவர் விஜய் அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். இந்தியாவின் ஆட்சி மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பிய காயிதேமில்லத் படம் மாநாட்டு மேடையில் இல்லாதது வருத்தமளிக்கிறது.

மதுவிலக்கு அமல் பிரிவு என ஒரு துறையை வைத்துக் கொண்டு, மதுவை விற்பதில் தமிழக அரசு அக்கறை காட்டுவதை மஜக எதிர்க்கிறது. முஸ்லிம்களுக்கு எதிரான வக்ஃபு திருத்தச் சட்டத்தை அரசு திரும்பப் பெற வேண்டும். இந்தச் சட்டம் தொடர்பாக கருத்து கேட்கும் நாடாளுமன்ற கூட்டுக் குழு, பாரபட்சமாக நடந்து கொள்கிறது.

ஆதரவான கருத்து தெரிவித்தால் பதிவு செய்கிறது. எதிர்க் கருத்தைத் தெரிவித்தால் புறக்கணிக்கிறது என்றார். அப்போது, மாநில துணைச் செயலாளர்கள் முகமது யூசுப் (மஜக), தகவல் தொழில்நுட்ப அணி சிக்கந்தர் பாட்சா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

x