சென்னை: லாட்டரி அதிபர் மார்ட்டின் மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை முடித்து வைத்த உத்தரவை ரத்து செய்துள்ள உயர் நீதிமன்றம், அந்த வழக்கு விசாரணையைத் தொடர மத்திய குற்றப்பிரிவு போலீஸார் மற்றும் அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டுள்ளனர்.
கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த நாகராஜன் என்பவரது இல்லத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நடத்திய சோதனையில் ரூ.7 கோடியே 20 லட்சத்து 5 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், மார்டின் உள்ளிட்டோருடன் இணைந்து கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்ததன் மூலமாக திரட்டப்பட்ட தொகை என நாகராஜன் வாக்குமூலம் அளித்தார்.
இதையடுத்து நாகராஜன், மார்ட்டின், மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் உள்ளிட்டவர்கள் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத் துறையும் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தது. இந்த விவகாரத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்பதால் வழக்கை முடித்து வைக்கக்கோரி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பரில் ஆலந்தூர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். அதையேற்ற நீதிமன்றம் மார்ட்டின் உள்ளிட்டோருக்கு எதிரான இந்த வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத் துறை தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், ‘‘இந்த விவகாரத்தில் மோசடி நடைபெற்றதற்கான ஆதாரங்கள் வலுவாக இருந்த நிலையிலும், போலீஸார் தாக்கல் செய்த அறிக்கையை ஏற்று நீதிமன்றம் இந்த வழக்கை முடித்து வைத்திருப்பது தவறானது’’ என வாதிட்டார்.
மத்திய குற்றப்பிரிவு சார்பில் ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், ‘‘மத்திய குற்றப்பிரிவு போலீஸாரின் அறிக்கையை ஏற்று வழக்கை முடித்து வைத்து நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதை எதிர்த்து மனுதாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை’’ என வாதிட்டார். அதேபோல, மார்ட்டின் உள்ளிட்டோர் தரப்பிலும் அமலாக்கத் துறையின் மேல்முறையீட்டு மனுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘‘மார்ட்டின் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீஸாரே இந்த வழக்கை முடித்து வைக்கும்படி அறிக்கை தாக்கல் செய்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எனவே மார்ட்டின் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை முடித்து வைத்து ஆலந்தூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறோம். எனவே இந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரும், அமலாக்கத் துறையும் மீண்டும் விசாரிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளனர்