சென்னை: பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் ரூ.1.55 கோடியில் அமைக்கப்பட்டுள்ள அரங்கத்தை முதல்வர் ஸ்டாலின், காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: ‘தேசியமும், தெய்வீகமும் எனது இரு கண்கள்’ என்று வீர முழக்கமிட்ட சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராலிங்க தேவர், ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் வசதி படைத்த ஜமீன் குடும்பத்தில் கடந்த 1908 அக்டோபர் 30-ம் தேதி பிறந்தார். ஆங்கில அரசை எதிர்த்து போராட, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தலைமையில் உருவாக்கப்பட்ட இந்திய தேசிய ராணுவத்துக்கு, தமிழகத்தில் இருந்து பெரும் படையை திரட்டி அனுப்பிய பெருமை முத்துராமலிங்க தேவரையே சாரும்.
ராமநாதபுரம், திருநெல்வேலி பகுதிகளில் கடந்த 1920-ம் ஆண்டுகளில் அமலில் இருந்த குற்றப் பரம்பரை சட்டத்துக்கு எதிராக போராடி, அந்த சட்டத்தை அகற்றினார். 1952-ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் அருப்புக்கோட்டை மக்களவை தொகுதி, முதுகுளத்தூர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு, இரண்டிலும் வெற்றி பெற்று பல்வேறு உச்சங்களை தொட்டார். ஆன்மிகம், தேசியம், பொதுவுடைமை, ஏகாதிபத்திய எதிர்ப்பு, சாதி எதிர்ப்பு ஆகிய முக்கிய கொள்கைகளை தன் வாழ்நாள் இறுதிவரை உறுதியாக பின்பற்றினார். அவரது பிறந்தநாள், தமிழக அரசால் ஆண்டுதோறும் அக்டோபர் 30-ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில், தேவர் ஜெயந்தி விழாவின்போது, கூட்ட நெரிசலை தவிர்க்கவும், வெயில், மழையில் இருந்து பாதுகாக்கவும் பசும்பொன் கிராமத்தில் நிரந்தர மண்டபம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, ரூ.1.55 கோடியில் 2 மண்டபங்கள் அமைக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
அதன்படி, 9,849 சதுரஅடி பரப்பளவில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தலா 500 ஆண்கள், 500 பெண்கள் தனித்தனியாக வரிசையில் செல்லும் வசதி, மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்தளம், சுப நிகழ்ச்சிகள் நடத்த மேடை, மின்விளக்கு, மின்விசிறி ஆகிய வசதிகளுடன் மக்களுக்கான காத்திருப்பு கூடம் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கான நிரந்தர நிழற்கூரை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
இந்த அரங்கத்தை முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக நேற்று திறந்து வைத்தார். அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், ராஜ கண்ணப்பன், தலைமைச் செயலர் முருகானந்தம், பொதுப்பணித் துறை செயலர் மங்கத்ராம் சர்மா, செய்தித் துறை செயலர் வே.ராஜாராமன், செய்தித் துறை இயக்குநர் இரா.வைத்திநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தேவர் குருபூஜை விழா யாகசாலையுடன் தொடக்கம்: பசும்பொன் தேவர் நினைவாலய நிர்வாகத்தின் சார்பில் குருபூஜை ஆன்மிக விழா நேற்று காலை 7.35 மணிக்கு கணபதி ஹோமம் மற்றும் லட்சார்ச்சனைப் பெருவிழாவுடன் தொடங்கியது. இதையடுத்து தேவர் சிலைக்கு புனித நீர் ஊற்றப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் குழுவைச் சேர்ந்த சிவாச்சாரியார்கள் உலக நன்மை வேண்டி யாகசாலை பூஜைகளை நடத்தினர்.
இந்நிகழ்வில் தேவர் நினைவாலய அறங்காவலர் காந்திமீனாள் நடராஜன், பொறுப்பாளர்கள் பழனி,தங்கவேலு மற்றும் அவர்களது குடும்பத்தினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர். நேற்று மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜையும், இரவு 9 மணிக்கு தேரோட்டமும் நடைபெற்றது. இன்று (அக்.29) லட்சார்ச்சனை பெருவிழாவின் தொடர் நிகழ்வுகள் நடைபெறுகின்றன. நாளை (அக்.30) குருபூஜையை முன்னிட்டு காலை 6 மணிக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும்.