ரூ.75.52 கோடியில் ஆரியபாளையம் புதிய உயர்மட்ட மேம்பாலம்: துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் திறந்து வைத்தார்  


புதுச்சேரி: ரூ.75.52 கோடி செலவில் ஆரியபாளையம் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள புதிய உயர்மட்ட மேம்பாலத்தினை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் திறந்து வைத்தார்.

புதுச்சேரி-விழுப்புரம் சாலையை இணைக்கும் முக்கிய பகுதியாக ஆரியபாளையம் சங்கராபரணி ஆற்றுப்பாலம் உள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த பழைய பாலம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் மிகுந்த சேதமடைந்தது.

கடந்த 2021 நவம்பரில் பெய்த கனமழையின்போது பாலத்தை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அங்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேம்பாலம் சேதமடைந்தும், குறுகியதாக இருப்பதாலும், நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாவதாலும் புதிய பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது.

இதையடுத்து மத்திய சாலை மற்றும் தரைவழிப்போக்குவரத்து அமைச்சகம் இதற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்தது. இதன்படி ரூ.75.52 கோடியில் புதுச்சேரி பிராந்தியத்தில் இந்திகாந்தி சதுக்கம் முதல் எம்.என்.குப்பம் வரை (வடமங்கலம், ஆரியபாளையம், வில்லியனூர், சுல்தான்பேட்டை, மூலகுளம், ஜெயாநகர், கம்பன் நகர், ரெட்டியார்பாளையம் மற்றும் ஜீவா நகர்) 11.24 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலையை மேம்படுத்துதல் மற்றும் ஆரியபாளையம் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே புதிய மேம்பாலம் உள்ளிட்டவைகள் கட்டவும் முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து கடந்த 2022-ம் ஆண்டு சங்கராபரணி ஆற்றின் குறுக்கே புதிய உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. அப்போதைய துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி உள்ளிட்டோர் பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தனர்.

இந்த புதிய உயர்மட்ட மேம்பாலம் புயல் மற்றும் மழைக்காலங்களில் சங்கராபரணி ஆற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்குகளில் இருந்து பாதுகாப்பதுடன், இந்த பகுதியில் வாகன நெரிசலை குறைக்க தீர்வு காணும் வகையில் 360 மீட்ட நீளமும், 18 மீட்டர் அகலமும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த உயர்மட்ட மேம்பாலத்தின் இருபுறமும் 480 மீட்டர் நீளத்தில் அணுகுசாலையும் போடப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த புதிய உயர்மட்ட மேம்பாலம் பணிகள் நிறைவு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த புதிய மேம்பாலத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் ரிப்பன் வெட்டி புதிய பாலத்தை திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார். சிறிது தூரம் நடந்து சென்று பாலத்தை பார்வையிட்டார். இதில் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், தேனீ.ஜெயக்குமார், சட்டப்பேரவை துணைத் தலைவர் ராஜவேலு, எதிர்கட்சித் தலைவர் சிவா, எம்எல்ஏ கே.எஸ்.பி.ரமேஷ், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன், செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

x