போனஸ் பிரச்சினை: செங்கோட்டையில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம்


தென்காசி: தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் ஒரு மாத சம்பள தொகையை தீபாவளி போனஸாக வழங்கக் கோரி இன்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு சங்க நிர்வாகிகள் முருகேஸ்வரி, பகவதி ஆகியோர் தலைமை வகித்தனர்.

ஏஐசிசிடியு தென்காசி மாவட்ட பொதுச் செயலாளர் வேல்முருகன் போராட்டத்தை தொடங்கிவைத்து பேசினார். ஜனநாயக தூய்மைப் பணியாளர்கள், தூய்மைக் காவலர்கள் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் சுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார். போராட்டத்தில் சுமார் 50 தூய்மைப் பணியாளர்கள் கலந்துகொண்டனர். போராட்டத்தையொட்டி நகராட்சி அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் செங்கோட்டை நகராட்சி அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், ஒப்பந்த நிறுவன மேலாளர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில், போனஸ் ஊக்கத் தொகை ரூ.1500 அனைத்து தூய்மை பணியாளர்களிடமும் நேரில் உடனடியாக வழங்கப்படும் என்றும், 2 நாள் ஊதியம், அக்டோபர் மாதத்துக்கான ஊதியம் அக்டோபர் மாதம் 30ம் தேதி வழங்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து, உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டு தூய்மைப் பணியாளர்கள் பணிக்குத் திரும்பினர்.

x