அடிப்படை வசதி கோரி பேரூராட்சி அலுவலகத்துக்கு பூட்டுப் போடும் போராட்டம்: பல்லடம் அருகே பரபரப்பு


பல்லடம்: பல்லடம் அருகே பேரூராட்சி நிர்வாகம் பட்டியலின மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தராமல் துரோகம் இழைப்பதாகக் கூறி, இன்று சாமளாபுரம் பேரூராட்சி அலுவலகத்தை பூட்டு போடும் போராட்டம் நடைபெற்றது.

பல்லடம் வட்டம் சாமளாபுரம் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பேரூராட்சி அலுவலகத்தை பூட்டும் போராட்டம் இன்று (அக். 28) நடந்தது. பேரூராட்சி அலுவலகம் முன்பு நடந்த இந்த பூட்டுப் போடும் போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் தமிழ்வேந்தன் தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.

இது தொடர்பாக அவர்கள் கூறும்போது, "சாமளாபுரம் 9-வது வார்டு காளிபாளையம் அருந்ததியர் தெருவில் சாக்கடை கட்டித்தர மறுக்கப்படுகிறது. பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை அவர்களுக்காக செலவிடாமல் பேரூராட்சி நிர்வாகம் அந்த மக்களுக்கு துரோகம் இழைக்கிறது. 15-வது வார்டு ஐயம்பாளையத்தில் பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்பட நிலத்தில் பேரூராட்சி நிர்வாகம் சாக்கடை கட்டுவதை நிறுத்த வேண்டும்.

வீட்டுமனை இல்லாத பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். ஒன்பதாவது வார்டு காளிபாளையம் அருந்ததியர் காலனியில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர், சாக்கடை, தார்ச் சாலை, தெரு விளக்கு வசதிகள் மறுக்கப்படுகிறது. நீர் நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்பில் இருந்து பட்டியலின மக்களை மட்டும் அகற்றி உள்ளனர். எஞ்சிய பிற பிரிவினரின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை” என்றனர்.

இதையடுத்து அங்கு திரண்டிருந்த போராட்டக்காரர்களுடன் பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் போலீஸார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கோரிக்கைகள் நிறைவேற்றித் தருவதாக உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து பூட்டுப் போடும் போராட்டம் முடிவுக்கு வந்தது.

x