தமிழக பாஜக சிறுபான்மை அணி மாநில துணைத் தலைவர் ராஜினாமா: தவெக-வில் இணைய முடிவு?


ஏ.ஆர்.பாஷா

திருச்சி: திருச்சி தென்னூர் ஜெனரல் பஜாரை சேர்ந்தவர் ஏ.ஆர்.பாஷா (40). திருச்சியில் வசித்து வரும் இவர், துபாயில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் இருந்த போது, 2019-ம் ஆண்டு அக்கட்சியில் இணைந்தார். அப்போது, அவருக்கு மாவட்ட பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

பின்னர், பாஜக தலைவர் அண்ணாமலையால், சிறுபான்மை அணி மாநில துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். கடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது, திமுக வேட்பாளரான தற்போதைய மேயர் மு.அன்பழகனை எதிர்த்து, பாட்ஷா தனது மனைவி ரஹமாவை நிறுத்தினார். அதில், அவர் 2-ம் இடம் பிடித்தார். தொடர்ந்து, சமூக ஊடகங்கள், செய்தி தொலைக்காட்சிகளில் நடைபெறும் விவாதங்களில் பாஜக சார்பில் பங்கேற்று வந்தார்.

இந்நிலையில், பாஷா தன்னுடைய கட்சி பதவியை நேற்று முன்தினம் ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் திருச்சி மாநகர் மாவட்டத் தலைவர் ராஜசேகர் ஆகியோருக்கு சமர்ப்பித்தார். இந்நிலையி்ல், விஜயின் தவெக கட்சியில் பாஷா இணைய உள்ளதாகவும், அதன் காரணமாகவே கட்சியிலிருந்து ராஜினாமா செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து ஏ.ஆர்.பாஷா கூறியபோது, “சில அதிருப்தியின் காரணமாக கட்சியில் இருந்து வெளியேறுகிறேன். அதற்கான காரணத்தை விரைவில் பத்திரிகையாளர்களை சந்தித்து கூறுவேன். தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய வாய்ப்பு உள்ளது” என்றார்.ஏ.ஆர்.பாஷா

x