லஞ்ச ஒழிப்பு வாரம்: புதுச்சேரியில் தலைமைச் செயலகம், ஆளுநர் மாளிகையில் உறுதிமொழி ஏற்பு


ஆளுநர் மாளிகையில் ஆளுநர் கைலாஷ்நாதன் முன்னிலையில் நடந்த நிகழ்வு தலைமைச் செயலகத்தில் தலைமைச்செயலர் சரத்சவுகான் முன்னிலையில் அரசு செயலர்கள், அதிகாரிகள் பங்கேற்ற நிகழ்வு

புதுச்சேரி: லஞ்ச ஒழிப்பு தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வாரவிழாவை கடந்த 12 ஆண்டுகளாக மக்கள் முன்னிலையில் நடத்துவதை புதுச்சேரி அதிகாரிகள் தவிர்த்து வருகின்றனர். இதனால் ஆளுநர் மாளிகை, தலைமைச் செயலகத்தில் ஆளுநர், அரசுச் செயலர்கள் ஊழியர்கள் முன்பாக உறுதி மொழி ஏற்றனர்.

ஆண்டுதோறும் அக்டோபர் இறுதி வாரத்தில் லஞ்ச ஒழிப்புணர்வு விழிப்புணர்வு வாரம் நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. நடப்பாண்டு அக்டோபர் 28 முதல் நவம்பர் 3ம் தேதி வரை லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாட்களில் மக்கள் அரசுத் துறைகளில் நேரடியாக புகார்களை தெரிவித்து நிவர்த்தி பெறுவது வழக்கம்.

ஆனால், புதுச்சேரியில் மக்கள் முன்னிலையில் அனைத்து துறைகளிலும் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் கடந்த 2012ம் ஆண்டுக்கு பிறகு நடத்தப்படவில்லை. அதற்குப் பதிலாக லஞ்ச ஒழிப்பு வாரத்தில் அரசு அலுவலகங்களில் முக்கிய துறைகளில் உறுதிமொழி ஏற்பதுடன் நிகழ்ச்சியை முடித்து வருகிறார்கள்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறுகையில், "மக்கள் மத்தியில் லஞ்ச ஒழிப்பு வாரத்தை நடத்தக்கோரி மத்திய அரசு தொடங்கி தலைமைச்செயலர் வரை மனுக்களை அளித்தும் பலனில்லை. 12-வது ஆண்டாக இம்முறையும் மக்கள் முன்னிலையில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வார விழா நடத்தப்படவில்லை. பொதுமக்கள் பங்களிப்புடன் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்படாமல் முடக்கப்பட்டுள்ளது. வெளிப்படையான நிர்வாகம், ஊழலற்ற பணி தேவைகளை மக்களுக்கு புதுச்சேரி அரசுத் துறை நிர்வாகம் அளித்திட இக்கூட்டத்தை நடத்த வேண்டும்.

கடந்த காலங்களில் நடத்தப்பட்ட கூட்டங்களில் ஊழல்கள் களையப்பட்டு 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. இதனால் அரசுக்கு கூடுதல் நிதி வருவாய் கிடைத்தது. நிதி கசிவு தடுக்கப்பட்டது. அரசின் அனைத்து துறைகளிலும் வெளிப்படை தன்மை ஏற்பட்டது. தொடர்ந்து 12-வது ஆண்டாக இம்முறையும் மக்கள் முன்னிலையில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்படாதது வருத்தமளிக்கிறது. மத்திய ஊழல் தடுப்பு ஆணைய பரிந்துரைப்படி புதுவையில் இக்கூட்டத்தை நடத்துவது அவசியம்" என்றனர்.

பொதுமக்கள் தரப்பில் பேசியவர்கள், "நிர்வாகம் செம்மையாக நடந்தால் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டத்தை நடத்தாமல் அதிகாரிகள் புறக்கணிப்பது ஏன்? புதுச்சேரியில் லஞ்ச ஒழிப்புத் துறையில் கடந்த பத்து ஆண்டுகளில் லஞ்சம் தொடர்பான புகார்கள் 15-ஐ தாண்டவில்லை. ஆனால், சென்னை சிபிஐ-க்கு புகார்கள் குவிந்து அவர்கள் இங்கு முகாமிட்டு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்" என்றனர்.

இதனிடையே, இன்று லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தையொட்டி ஆளுநர் மாளிகையில் லஞ்ச ஒழிப்பு மற்றும் நேர்மைக்கான உறுதி மொழி எடுக்கப்பட்டது. ஆளுநர் கைலாஷ்நாதன் உறுதிமொழியை வாசிக்க அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உறுதி மொழி எடுத்தனர்.

அதே போல், தலைமைச்செயலகத்தில் நேர்மைக்கான உறுதிமொழியை தலைமைச்செயலர் சரத் சவுகான் வாசித்தார். அதை தமிழில் அரசு செயலர் கேசவன் சொல்ல, ஊழியர்கள் உறுதி மொழி ஏற்றனர். இந்நிகழ்வில் அரசு செயலர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.

x