மதுரை: நாம் தமிழர் கட்சியுடன், தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி அமைப்பது தொடர்பாக விஜய்தான் முடி வெடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
மருது பாண்டியர்கள் குரு பூஜையை முன்னிட்டு, மதுரை தெப்பக்குளத்தில் உள்ள அவர்களது சிலை, சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் உள்ள மருது பாண்டியர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சீமான், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: விக்கிரவாண்டியில் விஜய் நடத்தும் தவெக மாநாடு மக்களிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். நாங்கள் கட்சி தொடங்கும்போது இந்த அளவுக்கு ஆதரவு இல்லை. திரை உலகப்புகழில் இருக்கும்போது. மக்களைச் சென்றடைவது எளிதாக இருக்கும்.
தவெக மாநாட்டு பேனரில் அண்ணா, பிரபாகரன் படங்கள் இடம்பெறவில்லை. கட்-அவுட் வைப்பது மட்டும் அரசியல் அல்ல. கருத்தியல்தான் அரசியல். மாநாடு நடத்தினால் கூட்டம் கூடத்தான் செய்யும். விஜய் நடத்தும் மாநாட்டை விட, மதுரையில் விஜயகாந்த் நடத்திய மாநாடுதான் சாதனை என்று பிரேமலதா கூறியதை மறுக்க முடியாது.
தவெக-நாதக கூட்டணி அமையுமா என்பதை காலம்தான் தீர்மானிக்கும். கூட்டணி குறித்து விஜய் தான் முடிவெடுக்க வேண்டும். விஜய்-ஐ பார்க்க வரும் கூட்டம் வாக்காக மாறுமா என்பது குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது. என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். அரசியலுக்கு நான் விரும்பி வரவில்லை. ஆனால், தம்பி விஜய் விரும்பி வருகிறார். அரசியல் என்பது கொடிய முதலைகள் நிறைந்த குளம். ஒவ்வொரு காலடியையும் கவனமாக எடுத்து வைக்கவேண்டும் என்று விஜயிடம் நேரடியாகவே கூறிவிட்டேன். இவ்வாறு சீமான் தெரிவித்தார்.