கோவை: கோவை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் இரண்டு புதிய விமான சேவைகள் தொடங்கப்பட்டன. முதல் நாளில் சீரடிக்கு 160 பேர், சிங்கப்பூருக்கு 80 பேர் பயணம் மேற்கொண்டனர்.
கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு ஷார்ஜா, சிங்கப்பூர், அபுதாபி ஆகிய வெளிநாடுகளுக்கும் விமான சேவை வழங்கப்படுகிறது. கோவையில் இருந்து சீரடி மற்றும் சிங்கப்பூருக்கு புதிய விமான சேவை இண்டிகோ நிறுவனம் சார்பில் தொடங்கப்பட்டன.
கோவை விமான நிலையத்தில் ஞாயிறு (அக்.27) மாலை நடந்த தொடக்க விழாவில் கோவை விமான நிலைய இயக்குநர் (பொறுப்பு), விமான நிலைய மேலாளர் ராகவ் சுவாமிநாதன், இண்டிகோ மேலாளர் (பாதுாப்பு) விக்னேஷ், விற்பனை அதிகாரி (தமிழ்நாடு) ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து இண்டிகோ நிறுவன அதிகாரிகள் கூறும் போது, கோவையில் இருந்து முதல் முறையாக சீரடி மற்றும் சிங்கப்பூருக்கு விமான சேவைகளை தொடங்கியுள்ளோம். இரண்டு விமானங்களும் வாரத்தில் அனைத்து நாட்களிலும் இயக்கப்படும்.
கோவையில் காலை 11.30 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 3.10 மணிக்கு சீரடி சென்றடையும். அதே போல் கோவையில் இருந்து இரவு 8.15 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 3.15 மணிக்கு(சர்வதேச விமான பயண நேரம்) சிங்கப்பூர் சென்றடையும். சிங்கப்பூரில் இருந்து அதிகாலை 4.15 மணிக்கு புறப்பட்டு கோவைக்கு காலை 6.10 மணிக்கு விமானம் வந்தடையும்.
கோவையில் இருந்து சீரடிக்கு செல்ல மட்டுமே தற்போது விமான சேவை வழங்கப்படுகிறது. மறுபுறம் சீரடியில் இருந்து கோவைக்கு விமான சேவை தற்போது இல்லை. முதல் நாளில் சீரடிக்கு 160 பேர், சிங்கப்பூருக்கு 80 பேர் பயணம் மேற்கொண்டனர். இரண்டு சேவைகளுக்கும் ‘ஏர்பஸ் ஏ320’ ரக விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய விமானங்களில் 186 பேர்(விமானிகள், பணிப்பெண்கள் தவிர்த்து) பயணிக்க முடியும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.