ஹவாலா இடைத்தரகர் வாக்குமூலம்; புதுச்சேரி பாஜக தலைவர் செல்வகணபதி பதவி விலக வேண்டும் - சிபிஎம்


புதுச்சேரி: ஹவாலா இடைத்தரகர் வாக்குமூலம் அளித்துள்ளதன் அடிப்படையில் பாஜக தலைவர் செல்வகணபதி எம்பி உடனடியாக பதவி விலக வேண்டும் சிபிஎம் கோரியுள்ளது. அதே நேரத்தில் சிபிசிஐடி வழக்கு எனக்கு சம்பந்தமில்லாதது என்று எம்பி விளக்கம் வெளியிட்டுள்ளார்.

புதுச்சேரி சிபிஎம் மாநிலச் செயலர் ராஜாங்கம் இன்று வெளியிட்ட அறிக்கை: புதுச்சேரி பாஜக கட்சியின் தலைவரும், தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான புதுச்சேரி எம்.பி செல்வகணபதியை கடந்த மார்ச் 2024 மக்களவைத் தேர்தலின்போது தாம்பரம் ரயில் நிலையத்தில் நாலு கோடி ரூபாய் கணக்கில் வராத பணம் பிடிப்பட்ட வழக்கு தொடர்பாக தமிழக சிபிசிஐடி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

தனக்கு உடல்நிலை பாதித்துள்ளதாக கூறி நேரில் ஆஜர் ஆவதற்கு மூன்று மாதங்கள் கால அவகாசம் கேட்டு செல்வகணபதி சி பி சி ஐ டி க்கு கடிதம் எழுதி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. சிபிசிஐடி போலீஸார் விசாரணையில் சென்னையை சேர்ந்த ஹவாலா இடைத்தரகர் பங்கஜ் சூரஜ் பல முக்கிய தகவல்களை தெரிவித்து இருப்பதாகவும், பணம் கைமாறியது தொடர்பாக ஒப்பு கொண்டுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.

குறிப்பாக புதுச்சேரி செல்வகணபதி தன்னை தொடர்பு கொண்டு 20 கிலோ தங்க கட்டிகளை விற்று தருமாறு கூறியதோடு மேலும் ஐந்து கிலோ தங்க கட்டிகளை புதுச்சேரியிலேயே செல்வ கணபதி விற்பனை செய்து விட்டதாகவும், தேர்தல் செலவுக்காக தான் தங்கக் கட்டிகளை விற்று கொடுத்தேன் என்றும் சூராஜ் ஒப்புக்கொண்டதாக போலீஸ் விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.

ஆதலால் பிடிபட்ட நாலு கோடி ரூபாய் ஹவாலா பணத்திற்கும், புதுச்சேரி பாஜக தலைவர் செல்வகணபதி எம் பிக்குமான தொடர்பு ஊர்ஜிதம் ஆகி உள்ளது. இதற்கு தார்மீக பொறுப்பேற்று உடனடியாக புதுச்சேரி மாநிலங்களவை எம்பி பதவியை அவர் ராஜினாமா செய்து விட்டு தமிழக சிபிசிஐடி விசாரணையை சந்திக்க வேண்டும். அதே போல் அவர் மீது அமலாக்கத்துறை உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சமீபத்தில் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்தில் கணினி ஆப்ரேட்டராக பணியாற்றிய ரவிக்குமார் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது. சிபிஐ சோதனையில் ரவிக்குமார் மற்றும் அவர் குடும்பத்தினர் பெயரில் பல கோடிக்கு சொத்து வாங்கி குவித்துள்ளார்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது இவரின் வீட்டை சிபிஐ சோதனை செய்துள்ளது. ரவிக்குமாரின் மிக பெரிய சொத்து குவிப்புக்கு பின்னால் உள்ளவர்கள் யார் என்பது சிபிஐ விசாரணையில் வெளியே வரும் என எதிர்பார்க்கிறோம்.

ஆகவே ஹவாலா பண பரிவர்த்தனை வழக்கில் இணைக்கப்பட்டுள்ள பாஜக எம்.பி செல்வகணபதி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும், ரவிக்குமார் சொத்து குவிப்பு வழக்கில் சிபிஐ அரசியல் அழுத்தங்களுக்கு இடம் அளிக்காமல் உண்மையினை வெளி கொண்டு வர வேண்டும். மேலும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்துள்ள அரசியல் பிரபலங்கள், மற்றும் அதிகாரிகள் மீது சிபிஐ உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.

சிபிசிஐடி வழக்கு எனக்கு சம்பந்தமில்லாதது: செல்வகணபதி - இந்நிலையில், பாஜக மாநிலத்தலைவர் செல்வகணபதி எம்பி வெளியிட்ட அறிக்கையில், "சமுதாயத்தில் நான் அடைந்த வளர்ச்சியையும், அரசியலில் எனது சிறப்பான பணியால் கிடைத்த பதவி, பொறுப்புகளை சகித்து கொள்ள முடியாதவர்கள் என் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் திட்டமிட்ட சதியுடன் பொய் தகவல்களை பரப்புகின்றனர்.

எந்தவகையிலும் எனக்கு சம்பந்தமில்லாதது சிபிசிஐடி வழக்கு. இதைவைத்து அவதூறு பரப்புவோர் மீது சட்டப்படியாக நடவடிக்கைகள் எடுப்பேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

x