கரூர் ஜவஹர் பஜாரில் தற்காலிக தரைக் கடைக்கு அனுமதி கேட்டு வியாபாரிகள் மறியல்


கரூர்: கரூர் ஜவஹர் பஜாரில் தற்காலிக தரைக் கடைக்கு அனுமதி கேட்டு வியாபாரிகள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின்போது வெளியூர்களை சேர்ந்த ஜவுளி வியாபாரிகள் கரூர் நகரில் தீபாவளிக்கு நான்கைந்து நாட்களுக்கு முன்பிருந்து தற்காலிக தரைக் கடைகள் அமைத்து வியாபாரம் செய்வது வழக்கம்.

கரூர் பசுதீஸ்வரர் கோயிலையொட்டியுள்ள தெற்கு மடவளாக தெரு, திருவள்ளுவர் மைதானம், ஜவஹர் பஜார் ஆகிய பகுதிகளில் கடைகள் அமைத்து வந்தனர். தீபாவளியை முன்னிட்டு கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் தற்காலிக தரைக்கடைகள் அமைக்கப்பட்டு வாடகைக்கு விடப்பட்டு வந்தன. தீபாவளி தற்காலிக தரைக்கடை வியாபாரிகளிடம் தற்போது மாநகராட்சி சார்பில் கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லை.

திருவள்ளுவர் மைதானம் கடைவீதிக்கு வரும் வாகனங்கள் நிறுத்துமிடத்திற்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. மேலும் நிகழாண்டு பசுபதீஸ்வரர் கோயிலையொட்டி தற்காலிக தரைக்கடைகளுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளதால் ஜவஹர் பஜாரில் கடைகள் அமைக்கக்கூடாது என காவல் துறை சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன் அறிவிப்பு வைக்கப்பட்டது. இந்நிலையில் தெற்கு மடவளாக தெரு, பிரம்ம தீர்த்தம் சாலை உள்ளிட்ட இடங்களில் பலர் நேற்று தற்காலிக தரைக்கடைகள் அமைத்துள்ளனர்.

இந்நிலையில் ஜவஹர் பஜாரில் இன்று (அக். 27ம் தேதி) அமைக்கப்பட்டிருந்த தற்காலிக தரைக்கடைகளை அகற்றக் கோரி போலீஸார் அறிவுறுத்தினர். இதனால் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் கரூர் ஜவஹர் பஜாரில் கடை அமைக்க அனுமதி கேட்டு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காலை சுமார் 11 மணியளவில் திரண்டு கோஷங்கள் எழுப்பி மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து கரூர் நகர டிஎஸ்பி செல்வராஜ் தலைமையில் போலீஸார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பசுபதீஸ்வரர் கோயிலையொட்டி தெற்கு மட வளாக தெரு உள்ளிட்ட பகுதிகளில் இடங்களை அடையாளம் கண்டு வியாபாரிகளுக்கு ஒதுக்கி தந்தனர். பெரும்பாலான வியாபாரிகள் அவற்றை ஏற்றுக்கொண்டு கடைகளை அமைத்து வியாபாரத்தை தொடங்கினர்.

x