வெள்ளியங்கிரி மலை ஏற ரூ.5,099 கட்டணம்: அறிவிப்பை ரத்து செய்ய பாஜக வலியுறுத்தல்


சென்னை: கோவை வெள்ளியங்கிரி மலைக்குச் செல்பவர்கள் ரூ.5,099 கட்டணம் செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக பாஜக மாநிலச் செயலாளர் அ.அஸ்வத்தாமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில், தென் கைலாயமான வெள்ளியங்கிரி மலைக்குச் செல்வோர் ரூ.5,099 கட்டணம் செலுத்த வேண்டும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ‘மலையேற்றத் திட்டம்' என்ற பெயரில் இந்த அநியாயத்தை திராவிட மாடல் அரசு மேற்கொண்டுள்ளது.

நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்குச் சென்று, சிவபெருமானை வணங்கி வருகின்றனர். வெள்ளியங்கிரி மலைக்குச் செல்வோர் ஆன்மிக பக்தர்களே தவிர, மலை ஏற்றத்துக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் அல்ல.

வெள்ளியங்கிரி மலைக்குவரும் பக்தர்களை தடுப்பதற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திட்டம் தீட்டுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. உதயநிதி முன்னெடுத்துள்ள சனாதன, இந்து தர்ம ஒழிப்பு சதித் திட்டத்தின் ஓர் அங்கமா இந்த திட்டம் என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும்.

கடந்த வாரம்கூட திருவண்ணாமலையில் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு என்ற பெயரில் மலையைச் சுற்றி வந்தார். வேண்டுதலுக்காக கிரிவலம் சென்றிருப்பார் என்று மக்கள் கருதிய நிலையில், தற்போது திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும் பக்தர்களுக்குகூட கட்டணம் வசூலிக்கலாம் என்ற மோசமான யோசனையில் உதயநிதி அங்கு சென்று இருப்பாரோ என்ற சந்தேகம் எழுகிறது.

வன்மையாக கண்டிக்கிறோம்.. ஒரு மிகப்பெரிய ஆன்மிக ஆதார ஸ்தலமான வெள்ளியங்கிரி மலையின் வழிபாட்டை வெளிப்படையாகவே குலைக்கும் நோக்கத்துடன், இந்த அறிவிப்பை துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. உடனடியாக இந்த அறிவிப்பை ரத்துசெய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

x