அவிநாசி அருகே லாரி மீது கார் மோதியதில் 2 கல்லூரி மாணவிகள் உட்பட 3 பேர் உயிரிழப்பு


அவிநாசி: அவிநாசி அருகே நேற்று முன்தினம் நள்ளிரவில் லாரி மீது கார் மோதியதில் 2 கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தனர்.

கோவை மருதமலை சாலை ஐஓபி காலனியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவரது மகள் அபர்ணா (26), சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள ஐஐஎம் நிறுவனத்தில் இரண்டாமாண்டு எம்.பி.ஏ. படித்து வந்தார். அவரது மற்றொரு மகள் ஹேமா (21), கோவை தனியார் கல்லூரியில் பி.இ. படித்து வந்தார்.

கோவை ஆர்.எஸ்.புரம் ஐஸ்வர்யா காம்பவுண்ட் பகுதியைச் சேர்ந்த அபர்ணாவின் நண்பர் மோனிஷ்பாபு (28). இவரது காரில், கர்நாடக மாநிலம் பெங்களூரூ விமான நிலையத்தில் இருந்து அபர்ணாவை அழைத்துக் கொண்டு, மூவரும் கோவை நோக்கி நேற்று முன்தினம் நள்ளிரவு வந்து கொண்டிருந்தனர்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி பழங்கரை அருகே சிமென்ட் கிடங்கு பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது திடீரென கார் மோதியது. இதில் பலத்த காயமடைந்த மூவரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த அவிநாசி போலீஸார் 3 பேரின் சடலங்களையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து, லாரி ஓட்டுநர் கோவை கரும்புக்கடை ரகுமான்கானை (24) கைது செய்தனர்.

x