திருநெல்வேலி: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்று, 571 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கிப் பாராட்டுத் தெரிவித்தார்.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 31-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. பல்கலை. வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி தலைமை வகித்து, 571 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். அவர்களில் 14 மாணவர்கள், 97 மாணவிகள் என 111 பேர் தங்கப் பதக்கமும், 83 மாணவர்கள், 377 மாணவிகள் முனைவர் பட்டங்களும் பெற்றனர்.
தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களிலேயே அதிக அளவில் 337 மாணவிகள் சுந்தரனார் பல்கலையில் இந்த ஆண்டு முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். கணிதத் துறையில் ஜெஸ்வின் டைட்டஸ் என்ற மாணவர் கணிதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய 2 பாடங்களிலும் முதலிடம் பெற்று, இரு தங்கப் பதக்கங்களைப் வென்றார். மொத்தம் 33,821 பேருக்கு பட்டங்கள் வழங்கப்படுகின்றன.
விழாவில் பங்கேற்ற திருவனந்தபுரம் தேசிய புவி அறிவியல் ஆய்வு மைய இயக்குநர் என்.வி.சலபதிராவ் பேசியதாவது:
தட்சசீலா, நாளந்தா பல்கலைக்கழகங்கள் மூலம் 1,500 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் உயர்கல்வி சிறந்து விளங்கியது உணரலாம். தற்போது பல்வேறு நாட்டு மாணவர்களுக்கும், இந்திய பல்கலைக்கழகங்கள் கல்வி போதிக்கின்றன. இந்திய கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. சர்வதேச தரத்துக்கு இந்திய கல்வியை கொண்டு செல்வதில் தேசிய கல்விக் கொள்கை முக்கியப் பங்கு வகிக்கிறது.
கல்வி நிறுவனங்களில் தரமான கல்வியை போதிக்க, தகுதியான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். மாணவர்களுக்கு ஆசிரியர்கள் முன்மாதிரியாகத் திகழ வேண்டும். 2047-ல் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் லட்சியத்தை அடைய, இளைஞர்கள் பெரிய பங்களிப்பை அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
பல்கலை. துணைவேந்தர் ந.சந்திரசேகர் வரவேற்றார். பதிவாளர் ஜே.சாக்ரட்டீஸ், தேர்வாணையர் பாலசுப்பிரமணியன், திருநெல்வேலி எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். எனினும், பல்கலை. இணைவேந்தரும், தமிழக உயர்கல்வித் துறை அமைச்சருமான கோவி.செழியன் விழாவில் பங்கேற்கவில்லை.
ஏற்கெனவே, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாக்களில் பங்கேற்காத அமைச்சர், இந்த விழாவையும் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது