சாலையில் பாட்டில் சேகரித்து வந்தவர் குழியில் விழுந்து சாவு @ திருப்பூர்


திருப்பூர்: திருப்பூர் கல்லூரி சாலையில் பாலித்தின் பாட்டில் சேகரித்து ஜீவனம் நடத்தி வந்த இளைஞர், மாநகரில் தோண்டப்பட்டிருந்த தேங்கிய மழை நீர் குழிக்குள் இன்று (அக். 26) விழுந்து உயிரிழந்தார்.

திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மாநகரின் பல்வேறு இடங்களில் சாலை பணிகள் நடைபெறும் இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இந்த நிலையில் கல்லூரி சாலை அணைப்பாளையம் பாலம் அருகே இண்டியன் ஆயில் நிறுவனம் சார்பில், குழாய் பதிக்க புதிய குழி தோண்டப்பட்டுள்ளது. இந்த குழியில் மழைநீர் தேங்கி இருந்தது. சாலையோரம் இருந்த குழி என்பதால், எச்சரிக்கை தடுப்பு பலகை வைத்து தடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சாலைகளில் கிடக்கும் பாலித்தின் பாட்டில்களை சேகரித்து அதனை பழைய இரும்பு கடைகளில் போட்டு ஜீவனம் நடத்தி வரும் தூத்துக்குடியை சேர்ந்த மாரியப்பன் (30), இன்று கல்லூரி சாலையில் தோண்டப்பட்ட குழியில் தேங்கி நின்ற தண்ணீரில் பாலித்தின் பாட்டில் கிடப்பதை பார்த்து, அதை எடுக்க தடுப்புகளை தாண்டி உள்ளே சென்றபோது தண்ணீருக்குள் விழுந்து, குழிக்குள் விழுந்து மூழ்கி உயிரிழந்தார்.

இது தொடர்பாக அப்பகுதியினர் அளித்த தகவலின் பேரில், வடக்கு போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணையில் ஈடுபட்டு மாரியப்பன் சடலத்தை கைப்பற்றி, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.

x