‘அந்தந்த ஆண்டே பதவி உயர்வு வழங்க வேண்டும்’ - தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்க பொதுக்குழுவில் தீர்மானம்


திருச்சி: உரிய காலத்தில் அனைத்து நிலை பணியாளர்களுக்கும் அந்தந்த ஆண்டே பதவி உயர்வு வழங்க வேண்டும் என திருச்சியில் இன்று நடைபெற்ற தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்க மாநில பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்க மாநில பொதுக்குழுக் கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. திருச்சி கிளை மாநில செயற்குழு உறுப்பினர் டி.கிருஷ்ணன் வரவேற்றார். மாவட்டத் தலைவர்கள் திருச்சி வி.பி.சுப்பிரமணியன், தஞ்சாவூர் ரஞ்சித், செயலாளர் கே.சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநிலத் தலைவர் சு.கார்த்திகேயன் தலைமை வகித்து பேசினார். மாநில பொதுச்செயலாளர் இ.செல்வராஜன், பொருளாளர் கார்த்திகேயன், துணைத் தலைவர் ஜி.கார்த்திகேயன், இணைச் செயலாளர் ஓ.வி.பாண்டி ஆகியோர் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். திருச்சி மாவட்டச் செயலாளர் ஏ.அன்பரசு நன்றி கூறினார்.

கூட்டத்தில், துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர்களுக்கு 35 ஆண்டுகள் தீர்க்கப்படாமல் உள்ள ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். இடர்படிக்கு (எஸ்டிஎஃப் சிறப்பு இலக்குப்படை) இணையாக ரூ.6,000 வழங்க வேண்டும். ஆண்டுக்கு இருமுறை சீருடைப்படி தலா ரூ.4,500 ஆக உயர்த்தி காவல்துறைக்கு இணையாக வழங்க வேண்டும். இணையம் மூலமாக செய்யப்படும் மாறுதல்களில் உள்ள குளறுபடிகளை முழுமையாக நீக்கி, மாறுதலுக்கான கலந்தாய்வு மேற்கொள்ள வேண்டும்.

வனச்சரக அலுவலர் பணியிலிருந்து உதவி வனப்பாதுகாவலர் பதவிக்கு பதவி உயர்வு உடனடியாக வழங்கப்பட வேண்டும். உரிய காலத்தில் அனைத்து நிலை பணியாளர்களுக்கும் அந்தந்த ஆண்டே பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 60 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, வனப்பணியில் உயிர் தியாகம் செய்த வன தியாகிகளுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

x