சென்னை: சென்னை மதுரவாயலில் இளம் பெண் ஒருவர் மசாஜ் சென்டர் ஒன்றில் பணியாற்றுகிறார். இவரது வீட்டுக்கு கடந்த 17-ம் தேதி வந்த நபர் ஒருவர், தான் தனிப்படை போலீஸ் என்றும், பாலியல் தொழில் செய்வதாக கிடைத்த தகவலை அடுத்து கைது செய்ய வந்துள்ளதாகவும் கைது செய்யாமல் இருக்க ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும் என்று பெண்ணை மிரட்டி உள்ளார். பயந்துபோன அப்பெண் வீட்டிலிருந்த ரூ.50 ஆயிரத்தை எடுத்து அந்த நபரிடம் கொடுத்துள்ளார். மேலும் பணம் வேண்டும் என அந்த நபர் மிரட்டியுள்ளார்.
இதையடுத்து, அப்பெண்ணின் கணவர் ஏடிஎம் மையத்துக்கு பணம் எடுக்க சென்றபோது இளம்பெண்ணை மிரட்டி அந்த நபர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. ரூ.15 ஆயிரம் பணத்துடன் திரும்பிய கணவரிடம் இருந்து பணத்தை பறித்த அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். போலீஸ் எனக் கூறி பணம் பறித்ததோடு, பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தது திருவான்மியூரைச் சேர்ந்த ஆயுதப்படை காவலர் பாவுஷா (28) என்பது விசாரணையில் தெரிந்தது. அவரை போலீஸார் கைது செய்தனர்.