சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் வெள்ளம் அபாயம் குறித்த தகவல்களை துரிதமாக வழங்க ரூ.68 கோடியில் நிகழ்நேர வெள்ளப்பெருக்கு முன்னறிவிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக நீர்வளத் துறை செயலர் மணிவாசன் தெரிவித்தார்.
இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) சார்பில் தென்னிந்திய பகுதிகளில் நீர்வளம் எதிர்கொண்டு உள்ள சவால்கள், தீர்வுகள் தொடர்பாக கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் தென் மாநிலங்களைச் சேர்ந்த நீர் மேலாண்மை வல்லுநர்கள், அரசுத் துறை அலுவலர்கள், ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று தங்கள் மாநிலங்களில் உள்ள நீர்வளம், மேலாண்மை தொடர்பான திட்டங்கள், தொழில்நுட்பங்கள் குறித்த தகவல்களை பகிர்ந்துகொண்டனர்.
இதன் தொடக்க அமர்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தமிழக நீர்வளத் துறை செயலர் கே.மணிவாசன் பேசியதாவது:
தமிழகத்தைப் பொறுத்தவரை நீர் மேலாண்மையில் 2 பிரச்சினைகள் உள்ளன. ஒன்று தேவைப்படும் நேரங்களில் தேவையான நீர் கிடைப்பதில்லை. மற்றொன்று மழை அதிகமாக பெய்வதால் வரும் வெள்ளம். இவற்றை சரிசெய்வதற்கான முயற்சிகளை நாம் முன்னெடுத்து வருகிறோம்.
தற்போது தென்மேற்கு பருவமழையைவிட, வடகிழக்கு பருவமழையை கணிப்பதில் 25 சதவீதம் அளவுக்கு மாறுபாடுகள், சிரமங்கள் இருப்பதாக வானிலை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். காலநிலை மாற்றம், காற்று திசை மாற்றம் உட்பட பல்வேறு அம்சங்கள் அதற்கு காரணிகளாகக் கூறப்படுகின்றன. இதனால் சில நேரங்களில் எதிர்பார்ப்பதைவிட அதிகமாக மழை பெய்கிறது. இல்லையெனில் மழை குறைந்துவிடுகிறது. எனவே, துல்லியமாக கணிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
இதுதவிர சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் தொழில்நுட்பங்களின் உதவி கொண்டு நீர் மேலாண்மையை சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி சுமார் ரூ.68 கோடி மதிப்பீட்டில் நிகழ்நேர வெள்ளப்பெருக்கு முன்னறிவிப்பு (‘ரியல் டைம் ஃப்ளட் ஃபோர்காஸ்டிங்’) எனும் திட்டம் நீர்வளத்துறை சார்பில் கொண்டுவரப்பட உள்ளது. இதற்காக பிரத்யேக செல்போன் செயலியும் வடிவமைக்கப்பட உள்ளது. இந்த பணிகள் ஒருசில மாதங்களில் நிறைவுபெறும்.
இது செயல்பாட்டுக்கு வரும்போது சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் எவ்வளவு மழை பெய்தால், எந்தளவுக்கு தண்ணீர் தேங்கும், ஏரிகளில் உள்ள நீர் அளவு, வெள்ள அபாய எச்சரிக்கை உட்பட நிகழ்வு நேர தரவுகளை உடனுக்குடன் பொதுமக்களே அறிந்து கொள்ளலாம்.
இதுதவிர, சென்னை மாநகரத்தில் நீர் மேலாண்மை மற்றும் வெள்ளத் தடுப்பு பணிகளுக்கான ஒருங்கிணைந்த திட்டத்தை ஜப்பான் பன்னாட்டு நிதி உதவியுடன் உருவாக்கும் முயற்சியில் நீர்வளத்துறை 2 ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளது. வெள்ளத் தடுப்பு பணிகளை மேற்கொள்ள ஆய்வு சார்ந்த திட்டமிடல் வேண்டும்.
மழை அளவைக் கொண்டு, செய்ய வேண்டிய துரிதகால, நீண்டகால நடவடிக்கைகள், தண்ணீர் தேங்கும் பகுதிகளின் விவரம், அதை தடுப்பதற்கான வழிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அதில் இடம்பெறவுள்ளன. உதாரணமாக கொசஸ்தலை ஆற்றின் முகத்துவாரம் பகுதியை அகலப்படுத்துவது, பக்கிங்காம் கால்வாயை கூடுதலான இடங்களில் கடலில் இணைப்பது போன்றவை இதில் வரும்.
அதேபோல், வேளாண்மைக்கும் அதிக அளவிலான தண்ணீர் தேவைப்படுகிறது. அதனால் குறைந்த அளவிலான தண்ணீரில் அதிக விளைச்சல் தரும் சந்தைப்படுத்தக்கூடிய பயிர்களை விவசாயிகள் பயிர் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்கான பணிகளை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்துடன் இணைந்து மேற்கொள்ள இருக்கிறோம்.
ஏற்கெனவே நீர்நிலைகளில் உள்ள பல்வேறு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. ஜிபிஎஸ் உதவியுடன் நீர்நிலைகளின் எல்லைகள் வரையறுக்கப்பட்டு வருகின்றன. நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை இதன்மூலம் கண்டறிந்து அகற்றவும், புதிய ஆக்கிரமிப்புகள் வராமல் தடுக்கவும் முடியும்.
மேலும், கடந்த ஆண்டு மழை பாதிப்பைக் கருத்தில்கொண்டு தமிழக அரசு ரூ.630 கோடி நிரந்தர வெள்ள தடுப்புப் பணிகளுக்கு வழங்கியுள்ளது. இதன்மூலம் ஆறுகள், கால்வாய்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.