மேட்டூர்: ‘வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் இருக்கும்’ என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்தார்.
சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த மேல்சித்தூரில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி பேசியதாவது: நாமக்கல்லில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, அதிமுகவின் வாக்குகள் சரிந்து விட்டதாகவும், நான் கனவு காண்பதாகவும் பேசியுள்ளார். 2019-ம் ஆண்டைவிட (33.92%) 2024 மக்களவைத் தேர்தலில் (26.50%) திமுகவின் வாக்குவங்கி 7 சதவீதம் குறைந்துள்ளது. அதேநேரம், 2019-ம் ஆண்டைவிட (19.39%), 2024 மக்களவைத்தேர்தலில் (20.50%) அதிமுகவின் வாக்கு வங்கி 1 சதவீதம் உயர்ந்துள்ளது.
கூட்டணியை நம்பித்தான் முதல்வர் ஸ்டாலின் கட்சி நடத்துகிறார்; ஆட்சியும் செய்கிறார். திமுக கூட்டணி வலுவாக இருப்பதாகக் கூறிவிட்டு, கூட்டணியில் கருத்து வேறுபாடு இருக்கும்; ஆனால் பிளவு இருக்காது என்று சொல்கிறார். இதற்கு கூட்டணியில் விரிசல் என்றுதான் அர்த்தம். நான் ஜோதிடராக மாறிவிட்டேன் என முதல்வர் சொல்கிறார். எனது ஜோதிடம் பலிக்கும். 2026-ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வரும். திமுக கம்பெனிக்கு ஸ்டாலின்தான் சேர்மன். குடும்ப உறுப்பினர்கள் உதயநிதி,கனிமொழி உள்ளிட்டோர் இயக்குநர்கள். அதனால்தான் முதல்வராகவும், துணை முதல்வராகவும், எம்.பி.யாகவும் உள்ளனர். வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக 2026-ம் ஆண்டு தேர்தல் இருக்கும்.
திமுக ஆட்சியில் அனைத்து வரியையும் உயர்த்திவிட்டனர். ஆனால், திட்டம்தான் வரவில்லை. 2026 தேர்தலில் அதிமுகவில் பலமான கூட்டணி நிச்சயம் அமையும். இவ்வாறு அவர் பேசினார்.